மரத்தடியில் பாடம் படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள்...!
கள்ளக்குறிச்சி அருகே வகுப்புகள் பற்றாக்குறையால் அரசு பள்ளி மாணவர்கள் மரத்தடியில் பாடம் படிக்கும் வருகின்றனர்.;
கண்டாச்சிமங்கலம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே சு.ஒகையூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை 752 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
மேலும் 23 ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இந்தப் பள்ளி வளாகத்தில் சுமார் 6 கட்டிடங்கள் அமைந்துள்ளது. இதில் 3 கட்டிடங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்து போனது. இதில் ஒரு கட்டிடம் மட்டும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் 2 கட்டிடங்கள் முற்றிலும் சேதம் அடைந்ததால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் அந்த கட்டிடங்களில் நடைபெற வேண்டிய 6- ஆம் வகுப்பில் இரண்டு வகுப்புகளும் மற்றும் 7-ஆம் வகுப்பில் இரண்டு வகுப்புகளும் ஆக மொத்தம் 4 வகுப்பு மாணவர்கள் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடி நிழலில் படிக்கும் நிலை உள்ளது.
மேலும் மழை பெய்யும் நேரங்களில் ஒரே வகுப்பறையில் 2 வகுப்பு மாணவர்களையும் அமர வைக்கும் நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
எனவே பள்ளி மாணவர்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து பயன்படுத்தப்படாத 2 கட்டடங்களை உடனடியாக அகற்றவும், புதிய கூடுதல் கட்டிடங்கள் கட்டித் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.