தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க அரசு உத்தரவு
தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க மருத்துவக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலை இறுதிக்கட்டத்தில் இருந்த நிலையில், மீண்டும் தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.
இது 4-வது அலைக்கான அறிகுறியா? என்றும் மக்களிடையே சந்தேகம் கிளம்பி உள்ளது. தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு மருத்துவக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அனைத்து சுகாதார பணியாளர்களும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் மருத்துவம் மற்றும் செவிலிய மாணவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ கல்லூரி வளாகத்தில் பெரிய அளவில் மாணவர்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
வட மாநிலங்கள் மற்றும் சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா பரவல் காரணமாக இந்த உத்தரவு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.