சென்னையில் வாலிபர் போலீஸ் நிலையத்தில் மரணம்? - தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்
போலீஸ் நிலையத்தில் வாலிபர் இறந்தது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
சென்னையில் விக்னேஷ் என்ற வாலிபர் போலீஸ் நிலையத்தில் இறந்தது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் சென்னையைச் சேர்ந்த சங்கர், டெல்லியை சேர்ந்த் அமல் காந்தி சக்மா ஆக இருவரும் இணையதளத்தின் வாயிலாக புகார் அளித்துள்ளனர்.
விக்னேஷ், சுரேஷ் ஆகிய இரண்டு வாலிபர்களையும் சென்னை போலீசார் கடந்த 18-ந் தேதி நள்ளிரவு ரோந்து பணியின்போது மடக்கி விசாரித்து தலைமைச் செயலக காலனி போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். விக்னேஷ் தனக்கு வாந்தி, மயக்கம் வருவதாக 19-ந் தேதி காலை தெரிவித்துள்ளார்.
பின்னர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்ததாக போலீசார் தெரிவித்தனர். விக்னேஷின் உறவினர்கள் அவரது முகத்திலும், கையிலும் காயங்கள், வீக்கத்தை பார்த்ததாக தெரிவித்துள்ளனர். உறவினர்களின் இறுதி அஞ்சலிக்கு அனுமதிக்காமலேயே, விக்னேஷின் உடலை போலீசார் தகனம் செய்து விட்டனர்.