புதுச்சேரியில் கவர்னர் மூலம் விரைவில் ஆட்சி மாற்றம்
புதுச்சேரியில் கவர்னர் மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசு சதித்திட்டம் தீட்டுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.;
புதுச்சேரியில் கவர்னர் மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசு சதித்திட்டம் தீட்டுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.
கவர்னர் மூலம் நெருக்கடி
புதுச்சேரியை அடுத்த மண்ணாடிப்பட்டு பெரியபேட் பகுதியில் அம்பேத்கர் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டது. இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. திறந்து வைத்தார்.
பின்னர் புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் நிருபர்களுக்கு தொல்.திருமாவளவன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதவாது:-
புதுச்சேரி மாநில ஆட்சியில் பா.ஜ.க.வின் தலையீடு வெளிப்படையாக தெரிகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட என்.ஆர்.காங்கிரஸ் அரசால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. முதல்-அமைச்சர் ரங்கசாமி சுதந்திரமாக ஆட்சி செய்ய வேண்டும். கவர்னர் மூலம் அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.
கருப்புக்கொடி போராட்டம்
புதுச்சேரியில் கவர்னர் மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு சதித்திட்டம் தீட்டி வருகிறது. இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மருத்துவ கல்விக்கு நீட் நுழைவு தேர்வு போன்று, பட்ட படிப்புக்கும் கியூட் நுழைவுத் தேர்வு என்பது உள்நோக்கத்துடன் கூடிய தொலைநோக்கு திட்டமாக தெரிகிறது. தேசிய கல்விக்கொள்கை கைவிடப்பட வேண்டும். கியூட் நுழைவுத் தேர்வு முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
எந்த மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் கவர்னர் பதவி வேண்டாம். தமிழகத்தில் பா.ஜ.க.வின் விருப்பத்தை நிறைவேற்றும் சேவை கட்சியாக அ.தி.மு.க. முழுமையாக மாறிவிட்டது.
புதுச்சேரிக்கு அமித்ஷா வருகையின்போது கருப்புக்கொடி போராட்டம் நடத்தவுள்ளதாக எதிர்க்கட்சியினர் அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். அதனை அறவழியிலும், கட்டுப்பாடுடனும் நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.