’கவர்னர் உயிருக்கு அச்சுறுத்தல், திமுக அரசு மீது நடவடிக்கை எடுங்கள்’ - ஜனாதிபதி, பிரதமரிடம் அதிமுக புகார் மனு
தமிழக கவர்னர் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் திமுக அரசு மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் ஜனாதிபதிக்கு அதிமுக புகார் மனு அனுப்பியுள்ளது.;
சென்னை,
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உயிருக்கு அச்சுறுத்தல் என அதிமுக புகார் மனு அளித்துள்ளது. திமுக அரசு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக சார்பில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சமீபத்தில் மயிலாடுதுறையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அவருக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம், பெண்கள் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் ஆகியவற்றில் திமுக அரசின் மீது அரசியல் சாசனத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சட்ட ஆலோசனை குழு உறுப்பினரும், வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் முருகவேல் இன்று புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
இந்திய ஜனாதிபதி, பிரதமர், மத்திய உள்துறை அமைச்சகம், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆகியோருக்கு மின் அஞ்சல், பதிவு தபால் மூலம் இந்த புகார் மனுவை அதிமுகவின் முருகவேல் அனுப்பியுள்ளது.
4 பக்கங்கள் அடங்கிய மிக விரிவான அந்த புகார் மனு இன்று காலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த புகார் மனுவில் சமீபகாலமாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது எனவும், அண்மையில் கவர்னருக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு, அவரது உயிருக்கான அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அரசியல் சாசனத்தின்படி திமுக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சகம், சுப்ரீம் கோட்ர்டு தலைமை நீதிபதிக்கு அதிமுக அனுப்பியுள்ள புகார் மனு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.