ரூ.5 கோடி மோசடியில் எனக்கு சம்பந்தம் இல்லை நடிகர் விமல் பரபரப்பு பேட்டி

ரூ.5 கோடி மோசடியில் எனக்கு சம்பந்தம் இல்லை என்று நடிகர் விமல் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பதிலடியாக புகார் கொடுத்துள்ளார். பின்னர் பரபரப்பு பேட்டியும் கொடுத்தார்.;

Update: 2022-04-20 18:49 GMT
சென்னை,

களவாணி, களவாணி-2 உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்தவர் விமல். இவர் மன்னர் வகையறா என்ற படத்தின் தயாரிப்புக்காக ரூ.5 கோடி கடன் பெற்றதாகவும், அந்த கடனை திருப்பித்தராமல் மோசடி செய்து விட்டதாகவும், சினிமா தயாரிப்பாளர் கோபி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார்.

இந்த நிலையில் நடிகர் விமல் நேற்று பிற்பகலில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். தயாரிப்பாளர் கோபி கொடுத்த புகாருக்கு பதிலடியாக புகார் மனு ஒன்றை கூடுதல் கமிஷனர் கண்ணனிடம் கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

மன்னர் வகையறா படத்தை பூபதி பாண்டியன் இயக்கினார். கணேசன் என்பவர் அந்த படத்தை தயாரித்தார். பின்னர் அவரால் செலவு செய்ய முடியவில்லை. இதனால் சிங்காரவேலன் என்பவரை பூபதி பாண்டியன் அறிமுகம் செய்தார். சிங்கார வேலன் அவரது நண்பர் கோபியிடம் ரூ.3 கோடி வாங்கி படத்திற்கான செலவை செய்தார். அந்த படத்தின் மூலம் ரூ.8 கோடி சம்பாதித்தார்.

கோபி தற்போது என்மீது கொடுத்துள்ள ரூ.5 கோடி மோசடியில் எனக்கு சம்பந்தம் இல்லை. எனக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையிலும், எனது புகழை கெடுக்கும் நோக்கத்திலும் இந்த புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரபரப்பு பேட்டி

பின்னர் நடிகர் விமல் நிருபர்களுக்கு அளித்த பரபரப்பு பேட்டியில் கூறியதாவது:-

சிங்காரவேலன்தான், கோபிக்கு பணம் கொடுக்க வேண்டும். எனக்கும், அதற்கும் சம்பந்தம் இல்லை. கோபி பணம் கேட்கும்போதெல்லாம், சிங்காரவேலன் என்னை கை காண்பித்து விடுவார். எனது பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து, என்னை பல வகையில் சிங்காரவேலன் மிரட்டி வந்தார். நான் எனது புகழுக்கு களங்கம் ஏற்பட்டு விடும், என்று பயந்து சமாளித்து வந்தேன். எனது பயத்தை அவர் எனது பலவீனமாக எடுத்துக்கொண்டு என்னை மிரட்டி வந்தார்.

இதனால்தான் சிங்காரவேலன், கோபி உள்ளிட்டோர் மீது விருகம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தேன். அந்த புகாரில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கைது நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் முன்ஜாமீன் பெற்று விட்டனர். இது தொடர்பாக ஐகோர்ட்டிலும் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.

மன உளைச்சல்

சிங்காரவேலன் கொடுத்த தொல்லையால் கடந்த 3 ஆண்டுகளாக நான் மன உளைச்சலில் இருந்தேன். நான் புதிதாக படம் நடிக்கும்போதெல்லாம், சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களிடம் என்னைப்பற்றி தவறான தகவல்களை சொல்லி சிங்காரவேலன் மிரட்டி வந்தார். அதன் பிறகு துணிச்சலாக நான் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க ஆரம்பித்த பிறகுதான் எனக்கு ஓரளவு தொல்லை குறைந்தது. இப்போது மீண்டும் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளனர். என்மீது கொடுத்துள்ள புகார் பற்றி பத்திரிக்கைகளில் படித்துதான் நான் தெரிந்து கொண்டேன். என்மீது கொடுத்துள்ள புகார் பொய்யானது. எனக்கு மிரட்டல் வருவதால் உரிய பாதுகாப்பு கேட்டும் புகார் மனுவில் கோரிக்கை வைத்துள்ளேன்.

இவ்வாறு விமல் கூறினார்.

மேலும் செய்திகள்