மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி...!

கடலூரில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.;

Update: 2022-04-20 11:30 GMT
கடலூர், 

மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான போட்டிகள் கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, மாவட்ட அளவிலான போட்டிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலசுந்தரம் முன்னிலை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா வரவேற்றார்.

அதனை தொடர்ந்து கால் ஊனமுற்றோர், குள்ளமானோருக்கு 50 மீட்டம் ஓட்டப்பந்தயமும், கை ஊனமுற்றோருக்கு 100 மீ. ஓட்டம், கால் ஊனமுற்றோருக்கு குண்டு எறிதல், இரு கால்களும் ஊனமுற்றோருக்கு 100 மீ. சக்கர நாற்காலி போட்டியும் நடத்தப்பட்டது.

பின்னர் முற்றிலும் பார்வையற்றோருக்கு 50 மீ.ஓட்டம், குண்டு எறிதலும், மிகக் குறைந்த பார்வையற்றோருக்கு 100 மீ. ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல் போட்டியும், புத்தி சுவாதீனம் முற்றிலும் இல்லாதவர்களுக்கு 50 மீ. ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல், புத்தி சுவாதீனம் நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு 100 மீ.ஓட்டம், குண்டு எறிதல் போட்டிகளும், காதுகேளாதோருக்கு 100 மற்றும் 200 மீ.ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீ.ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. மேலும் கபடி, டென்னிஸ், வாலிபால் உள்ளிட்ட குழு போட்டிகளும் நடத்தப்பட்டது.

ஒவ்வொரு போட்டியும் முடிந்ததும், வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்த மாற்றுத்திறனாளிகளுக்கு உடனுக்குடன் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறன் மிக்க மாணவ-மாணவிகள் 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்