கட்டிட தொழிலாளிக்கு கொலை மிரட்டல்

காதல் விவகாரத்தில் கட்டிட மொபட்டுக்கு தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்து அவரது தீவைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-04-18 16:37 GMT
காதல் விவகாரத்தில் கட்டிட மொபட்டுக்கு தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்து அவரது தீவைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காதல் விவகாரம்
வில்லியனூர் அருகே உள்ள அகரம் புதுநகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 37). கட்டிட தொழிலாளி. கணுவாப்பேட்டை சாமியார்தோப்பு பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் மதன் (18). இவர், ரமேசின் மகள்களை பள்ளிக்கு செல்லும் போது காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்துள்ளார். 
இதுகுறித்து  மாணவிகள் தனது தந்தையிடம் தெரிவித்தனர். இதை தொடர்ந்து ரமேஷ், மதனை அழைத்து கண்டித்தாராம். இதனால் ஆத்திரம் அடைந்த மதன், தனது நண்பர்களான உளவாய்க்கால் பகுதியை சேர்ந்த கவுதம் (21), கர்ணா (18), கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்த பிரேம் (19) ஆகியோருடன் ரமேசின் வீட்டிற்கு சென்று தகராறு செய்தார். அப்போது ரமேசை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 
வாலிபர் கைது
இதுகுறித்து ரமேஷ் வில்லியனூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கத்தியுடன் சுற்றித்திரிந்த கவுதமை கைது செய்தனர். இதனால் ரமேஷ் மீது மேலும் கோபமடைந்த மதன் மற்றும் கவுதமின் தந்தை திருமலை (45), பிரேம், கர்ணா மற்றும் சிலர் நேற்று நள்ளிரவு ரமேஷ் வீட்டிற்கு சென்று வீட்டின் வெளியே நின்றிருந்த அவரது மொபட்டை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
மொபட் தீப்பற்றி எரிவதை பார்த்த ரமேசின் மாமா ராமச்சந்திரன் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு ரமேஷ் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
இது குறித்து ராமச்சந்திரன் அளித்த புகாரின்பேரில் கவுதம், மதன், திருமலை, கர்ணா, பிரேம் ஆகியோர் மீது வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்