"காரத்துடன் கறிவிருந்து சாப்பிட்டு வந்தேன்" நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
"காரத்துடன் கறிவிருந்து சாப்பிட்டு வந்தேன்" நரிக்குறவர் இன மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
சென்னை
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியைச் சேர்ந்த நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் பிரியா, திவ்யா, தர்ஷினி ஆகியோர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. இதனை தொடர்ந்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து 3 மாணவிகளும் பேசினர்.
அப்போது, மாணவிகளின் கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக முதல்-அமைச்சர் உறுதியளித்தார். இதனையடுத்து ஆவடி நரிக்குறவர் குடியிருப்பு பகுதிக்கு அமைச்சர் நாசர், ஆவடி மேயர் உதயகுமார், துணை மேயர் சூரியகுமார் ஆகியோர் நேரில் சென்றனர்.
மேலும், முதல்-அமைச்சரை சந்தித்த 3 மாணவிகள் உட்பட 40 பேரை சந்தித்து அவர்களின் கல்வி குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து நரிக்குறவ மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துரையாடினார். இன்னும் ஒரு வாரத்தில் தங்களை காண நேரில் வருவதாக வாக்குறுதி அளித்தார்.
அப்போது பேசிய முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் உங்கள் வீட்டிற்கு வந்தால் சோறு போடுவீர்களா என கேட்டார். அதற்கு,உங்களுக்கு கறி சோறு போடுவதாக மாணவிகள் சந்தோஷமாக பதிலளித்தனர். அதற்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் கண்டிப்பாக ஒருநாள் வருவேன் என்று உறுதி அளித்தார்.
அவர் சொன்னது போலவே இன்று ஆவடியில் உள்ள மாணவியின் வீட்டிற்கு சென்றார். அவரை நேரில் பார்த்த உடன் அனைவரும் உற்சாகமடைந்தனர். மாணவிகள் பூ கொடுத்தும் பாசிமணி அணிவித்தும் வரவேற்றனர். அங்கிருந்த மாணவியின் வீட்டிற்கு சென்றார் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்.
இதனையடுத்து முதல்வருக்கு புது எவர்சில்வர் டம்பளரில் டீ கொடுக்கப்பட்டது. பின்னர் தட்டில் வைத்து இட்லி, வடை, சாம்பார், சட்னி அளிக்கப்பட்டது. அதனை அன்போடு சாப்பிட்ட முதல்-அமைச்சர் உணவு கொடுத்த அனைவருக்கும் நன்றி கூறினார். முதல் அமைச்சர் இட்லி சாப்பிடும் முன்பாக அருகில் இருந்த குழந்தைக்கு இட்லியை ஊட்டி விட்டு மகிழ்ந்தார்.
உணவு காரமாக இருந்ததாக முதல்வர் ஸ்டாலின் கூறினார். அதற்கு அங்கிருந்தவர்களே காரமாக சாப்பிட்டால்தான் சளி இருமல் வராது என்றும் தெரிவித்தனர்.
தொடர்ந்து திருமுல்லைவாயல் குடியிருப்பு பகுதியில் உள்ள ஜெயா நகரில் நரிக்குறவர் பயனாளிகளுக்கு முதல் அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை 39 நபர்களுக்கும், குடும்ப அட்டை 20 நபர்களுக்கும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகை 4 நபர்களுக்கும் சாலையோர வியாபாரிகளுக்கான கடனுதவி 38 நபர்களுக்கும் என மொத்தம் 101 நரிக்குறவர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் வழங்கினார்.
தொடர்ந்து பேசிய முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின், இதுபோன்ற விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார். சென்னை மேயர், அமைச்சர், துணை முதல்வராக இருந்தபோது முதல்வராக இருந்த போதும் எத்தனையோ விழாவில் பங்கெடுத்துள்ளேன். உங்களைப் போன்ற அன்பானவர்கள் கொடுக்கும் வரவேற்பும், இதுபோன்ற விழாக்களும்தான் மகிழ்ச்சியளிக்கிறது.
மக்கள் நன்றாக இருந்தால் நான் மட்டுமில்லை சமூகமே நன்றாக இருக்கும்.காரத்துடன் கறிவிருந்து சாப்பிட்டு வந்தேன. காரம் சாப்பிட்டால் உடல் வலுவாக இருக்கும் என்பதை தற்போது தெரிந்து கொண்டேன்.
விளிம்பு நிலை மக்களுக்கு என்றைக்கும் தி.மு.க. அரசு துணை நிற்கும் என்றும் மு.க ஸ்டாலின் கூறினார்.