கல்வியை ரகசிய பட்டியலில் வைத்திருக்கும் மத்திய அரசு - அமைச்சர் கடும் தாக்கு

கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு வர போராடிக்கொண்டு இருக்கிறோம் என்றும், அதை இப்போது மத்திய அரசு ரகசிய பட்டியலில் வைத்திருக்கிறது என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.;

Update: 2022-04-14 23:11 GMT
சென்னை,

அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளையொட்டி பொதுப்பள்ளிக்கான மாநில மேடை சார்பில் 'இந்திய அரசமைப்பு சட்டத்தின் பார்வையில் கல்வியும் ஜனநாயகமும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பொதுப்பள்ளிக்கான மாநில மேடை தலைவர் பி.ரத்தினசபாபதி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு முன்னிலை வகித்தார்.

தமிழ்நாடு மாணவர்-பெற்றோர் நலச்சங்க தலைவர் செ.அருமைநாதன் வரவேற்புரையாற்றினார். இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு உரையாற்றினர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

ரகசிய பட்டியலில் கல்வி

கல்வித்துறை அரசியல் செய்வதற்கான துறை அல்ல. அடுத்த உலகத்தை உருவாக்கும் மாணவச்செல்வங்களை வளர்த்தெடுக்கும் துறையாகத்தான் இருக்கிறது. கருத்துகள் எங்கிருந்து வந்தாலும், அது மாணவர்களுக்கு தேவையானது என்பதை உணர்ந்து, உடனடியாக அதில் முக்கியத்துவமானதை எடுத்துக்கொள்கிற துறையாக கல்வித்துறை இருந்து வருகிறது.

மாநில பட்டியலில் இருந்த கல்வி பொதுப்பட்டியலுக்கு சென்றது. அதை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்று நாம் எவ்வளவோ போராடிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இப்போது கல்வி எந்த பட்டியலில் இருக்கிறது என்பது தெரியாமல் அது ரகசிய பட்டியலில்தான் இருக்கிறது. கல்வி தொடர்பாக எந்த ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும் என்றாலும், அதில் கல்வியாளர்கள் இருக்க வேண்டும். ஆனால் தேசிய கல்விக்கொள்கையில் ஒரே ஒரு கல்வியாளர்தான் இருந்தார். மற்ற அனைவரும் அதிகாரிகள்தான்.

தேசிய கல்விக்கொள்கை

முதலில் இந்தியாவா? பாரதமா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். இதுபோல் வார்த்தைகளில் விளையாடி அவர்களுக்கு தேவையானவற்றை புகுத்திக்கொண்டே வருகிறார்கள். நம்முடைய கண்ணை கட்டி, ஏமாற்றி உள்ளே நுழைகிறார்கள். மேலும் தேசிய கல்விக்கொள்கையில் எந்த ஒரு இடஒதுக்கீடு பற்றியும் பேசப்படவில்லை. இது எந்த அளவுக்கு ஏமாற்றும் வேலை. கண்மூடித்தனமாக நாங்கள் எதையும் எதிர்க்கவில்லை. நியாயத்தைத்தான் பேசுகிறோம். எங்கள் கோரிக்கைகளை தீர்த்து வையுங்கள் என்றுதான் சொல்கிறோம்.

எது தேவையோ அதை தூக்கி எறிந்துவிட்டு, நம்முடைய மாணவச்செல்வங்களை வேறொரு வழியில் கொண்டு செல்லும் வழியில் சென்று கொண்டிருக்கிறார்கள். இதில் நாம் ஏமாந்துவிடக்கூடாது. நம்முடைய முதல்-அமைச்சர் மாணவச்செல்வங்களுக்கு எந்த திட்டங்களை கொண்டு வந்தாலும், அவர்களுடைய எதிர்கால நலனை கருத்தில்கொண்டுதான் கொண்டுவரவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதன்படிதான் கல்வித்துறை செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்