ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள் விற்பனை அமைச்சர் நாசர் தகவல்

ஆவின் பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகளில் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் நாசர் கூறினார்.;

Update: 2022-04-13 23:23 GMT
சென்னை,

தமிழக சட்டசபையில் பால்வளத்துறை மானிய கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு பதில் அளித்து அமைச்சர் சா.மு.நாசர் பேசியதாவது:-

தி.மு.க. தேர்தல் அறிக்கையின்படி, ஆவின் பால் விலை குறைக்கப்படும் என்று உறுதியளித்தபடி, பதவி ஏற்ற முதல் நாளே ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாயை முதல்-அமைச்சர் குறைத்தார். 2 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன் பெறும் வகையில் ஆவின் பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகளில் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பால் உற்பத்தி பொருட்கள் ரூ.82.11 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டைவிட 44 மடங்கு அதிகமாகும். தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் மூலம் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் பயன் அடையும் வகையில் தமிழக அரசின் 2022-ம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.122 கோடி மதிப்புள்ள ஆவின் நெய் வினியோகம் செய்யப்பட்டது.

அதிநவீன பாலகங்கள்

2020-21-ம் நிதி ஆண்டில் மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களில் 11.67 லட்சம் லிட்டராக இருந்த பால் உற்பத்தி 2021-22-ம் நிதியாண்டில் 13.5 லட்சம் லிட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் 2021-22-ம் நிதி ஆண்டில் 13.6 லட்சம் லிட்டராக பால் உற்பத்தி உயர்ந்துள்ளது. இதை வரும் ஆண்டில் 15 லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சுமார் 20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதனால் ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு கிராம பொருளாதாரத்தில் பணப் புழக்கம் ஏற்படுகிறது. 64 அதிநவீன பாலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 100 இடங்களில் தற்காலிகமாக நடமாடும் பாலகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

பால் கொள்முதல்

ஆவின் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. சேலம் ஒன்றியத்தில் பதப்படுத்தப்பட்ட பால், நறுமண பால், டெட்ரா பால் ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நெய் ஏற்றுமதிக்கு ஈரோடு மாவட்டத்தில் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. மொரீஷியஸ், மலேசியா, அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு ஆவின் பால் பொருட்கள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இயற்கை சீற்றங்கள் காலத்தில் கூட தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்கள் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். கூட்டுறவு இல்லாத கிராமங்களை கண்டறிந்து கூட்டுறவு பால் உற்பத்தி செய்ய வரைமுறை செய்யப்படும். மொத்த பால் கொள்முதலை 25 சதவீதமாக உயர்த்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அச்சரப்பாக்கத்தில் நாளொன்றுக்கு 2 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் உடைய பால் பண்ணை ரூ.71.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்