கனிம வள கொள்ளையை தடுத்த நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்கு போடுவதா? - சீமான் கண்டனம்

குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் கனிம வள கொள்ளையை தடுத்த நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்கு போடுவதா? சீமான் கண்டனம்.

Update: 2022-04-13 19:04 GMT
சென்னை,

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டத்தின் இதயமாகத் திகழும் மேற்குத்தொடர்ச்சி ‌மலையை உடைத்துத் தகர்த்த, கனிம வளங்களைக் கொள்ளையடித்து கேரளாவுக்குக் கடத்தும் கொடுஞ்செயலுக்கு எதிராகப் போராடும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது வழக்குத்தொடுத்து அடக்குமுறையை ஏவும் அரசின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன். முன்னதாக, கனிமவள கொள்ளையை தடுக்க போராடியபோது, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சுஜினைக் கொடூரமாகத் தாக்கிய காவல் துறையினர், தற்போது, கனிமவளக்கற்களைக் கொண்டுசென்ற வாகனங்கள் குறித்து புகார் தெரிவித்த நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் 10 பேர் மீது வழக்குத்தொடுத்திருப்பது ஏற்கவே முடியாதது.

தமிழ்நாட்டின் கனிமவளங்களை கடத்தியதற்காக கடந்த 3 மாதத்தில் மட்டும் ரூ.2 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதாக அமைச்சர் மனோ தங்கராஜ் வெளிப்படையாகக் கூறுகிறார். அந்தளவுக்குத் தலைவிரித்தாடும் கனிமவள கொள்ளையைத்தடுக்க, போர்க்கால அடிப்படையில் அரசின் சார்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், அந்த கொள்ளையை தடுக்க போராடுபவர்கள் மீது வழக்கு போடுவது நியாயமா?

ஆகவே, கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தப்படும் செயலை விரைந்து தடுத்து நிறுத்தவேண்டும். கொள்ளையர்களை சட்டத்தின் துணையுடன் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். மேலும், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது தொடுக்கப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்