சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி தங்க கட்டிகள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்துக்கு துபாய், கொழும்பு ஆகிய நகரங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-04-12 21:59 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பெரும் அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய்பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது துபாயில் இருந்து வந்து விமானத்தில் பயணம் செய்தவர்களை கண்காணித்தனர். அப்போது ஒரு குழுவாக வந்த 5 பேரை சந்தேகத்தின் பேரில், நிறுத்தி விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக அவர்கள் பேசியதால் கொண்டு வந்த உடமைகளை சோதனை செய்தனர்.

சார்ஜரில் மறைத்து...

அதில் இருந்த லேப்டாப் சார்ஜர்கள் சற்று வித்தியாசமாக இருந்ததால் பிரித்து பார்த்தனர். அதில் தங்கத்தை துண்டு துண்டாக வெட்டி மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து, ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 493 கிராம் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.

அதேபோல் துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை கண்காணித்த போது, சென்னையை சேர்ந்த வாலிபரின் உள்ளாடைக்குள் இருந்து ரூ.33 லட்சத்து 5 ஆயிரம் மதிப்புள்ள 686 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

ரூ.2 கோடி தங்கம்

மேலும் கொழும்பில் இருந்து சென்னை வந்த 12 பேரிடம் இருந்து ரூ.48 லட்சம் மதிப்புள்ள 992 கிராம் தங்கத்தை கைப்பற்றினர். ஆக மொத்தம் துபாய், கொழும்பு ஆகிய நகரங்களில் இருந்து சென்னை வந்த 18 பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 1 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ 171 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து தங்கத்தை யாருக்காக கடத்தி வந்தனர்? என்பது தொடர்பாக 18 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்