மாநில பொருளாதாரம் வளர்ச்சி பெற வங்கிகள் தாராளமாக கடன் வழங்க வேண்டும் முதல் அமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தல்
மாநில பொருளாதாரம் வளர்ச்சி பெற வங்கிகள் தாராளமாக கடன் வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.;
புதுச்சேரி
மாநில பொருளாதாரம் வளர்ச்சி பெற வங்கிகள் தாராளமாக கடன் வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
வங்கியாளர் குழும கூட்டம்
மாநில வங்கியாளர் குழுமத்தின் காலாண்டு கூட்டம் அக்கார்டு ஓட்டலில் நடந்தது. கூட்டத்திற்கு இந்தியன் வங்கியின் செயல் இயக்குனர் அஸ்வனி குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கடன் வழங்க வேண்டும்
கொரோனா ஊரடங்கு காலத்தில் வங்கிகள் சிறப்பாக செயல்பட்டு பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவியதற்காக நான் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயம், சிறு தொழில், சுற்றுலா மற்றும் கைத்தொழில் வளர்ச்சியடைய அதிக கடன் உதவிகள் வழங்க வேண்டும்.
தொழில்துறை மற்றும் சுற்றுலா துறைகளில் மக்கள் அதிகளவில் வேலைவாய்ப்பு பெற வங்கிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
வங்கிகள் தாராளமாக கடன் உதவி வழங்க வேண்டும். அப்போது தான் வேலைவாய்ப்புகளை பெருக்கவும், பொதுமக்களின் வருமானத்தை அதிகரிக்கவும் பயனுள்ளதாக அமையும். தொழில்கள், வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்போது மாநில பொருளாதாரம் வளர்ச்சி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்துகொண்டவர்கள்
கூட்டத்தில் வளர்ச்சி ஆணையர் பிரசாந்த் கோயல், ஊரக வளர்ச்சி துறை செயலாளர் ரவிபிரகாஷ், மாவட்ட கலெக்டர் வல்லவன், இந்திய ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குனர் சுவாமி, நபார்டு வங்கி முதன்மை பொதுமேலாளர் வெங்கடகிருஷ்ணா, சென்னை கார்ப்பரேட் அலுவலக இந்தியன் வங்கி பொதுமேலாளர் சூரிபாபு, இந்தியன் வங்கி மண்டல மேலாளரும் மாநில வங்கியாளர் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளருமான செந்தில்குமார், மாவட்ட முதன்மை மேலாளர் உதயகுமார் மற்றும் அனைத்து வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.