நெல்லையில் பயங்கரம்: நகைக்கடை அதிபரை வெட்டி 5 கிலோ தங்கம் கொள்ளை

வீரவநல்லூரில், நேற்றிரவு நகைக்கடை அதிபரை அரிவாளால் வெட்டி 5 கிலோ தங்கத்தை கொள்ளையடித்து சென்ற 3 மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-04-12 01:24 GMT
மைதீன் பிச்சை
நெல்லை:

நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் புதுமனை தெருவை சேர்ந்த அசனார் என்பவருடைய மகன் மைதீன்பிச்சை (வயது 55). இவர் வீரவநல்லூர் மெயின் பஜாரில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு 10 மணியளவில் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு, நகைகள் வைக்கப்பட்டு இருந்த பையுடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

வீட்டின் அருகே உள்ள தெருவில் சென்றபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் 3 பேர் வந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் 3 பேரும், மைதீன்பிச்சையை அரிவாளால் வெட்டிவிட்டு நகைப்பையை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுபற்றி அறிந்ததும் வீரவநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த மைதீன்பிச்சையை மீட்டனர். அப்போது அவர், கடையில் இருந்து கொண்டு வந்த 5 கிலோ தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டதாக போலீசாரிடம் கூறினார்.

உடனே அவரை, போலீசார் சிகிச்சைக்காக நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொள்ளை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இந்த துணிகர கொள்ளை குறித்து அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், சேரன்மாதேவி துணை சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், வீரவநல்லூர் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் அங்கு வந்து விசாரணையை முடுக்கி விட்டனர்.

மேலும், நகைளை அள்ளிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்