ராட்சத அலையில் சிக்கி பெங்களூரு டிரைவர் பலி

புதுச்சேரி கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி பெங்களூருவை சேர்ந்த கார் டிரைவர் பலியனார்.;

Update: 2022-04-10 17:57 GMT
புதுச்சேரி கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி பெங்களூருவை சேர்ந்த கார் டிரைவர் பலியனார்.
கார் டிரைவர்
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 42). கார் டிரைவர். இவர் தனது காரில் புதுவைக்கு சவாரி ஏற்றிக்கொண்டு இன்று வந்தார். பயணிகளை தங்கும் விடுதியில் இறங்கிவிட்டு புதுவை கடற்கரைக்கு இன்று மாலை வந்தார்.
அப்போது அவர், கடற்கரை சாலையில் உள்ள லே கபே பின்புறம் கடலில் இறங்கி குளித்தார். அப்போது கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கிய மணிகண்டன் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டார்.
சாவு
இதனை பார்த்து, அங்கிருந்தவர்கள் மணிகண்டனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. இது பற்றி போலீசுக்கும், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து கடலில் இறங்கி மணிகண்டனை தேடினர்.
இதற்கிடையே மணிகண்டனின் உடல் பழைய துறைமுகம் அருகே கரை ஒதுங்கியது. உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ஒதியஞ்சாலை சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மணிகண்டன் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்