முதியவரை கொன்ற தொழிலாளி கைது
பீடி தராததால் முதியவரின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
பீடி தராததால் முதியவரின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
முதியவர் கொலை
வில்லியனூர் ஆரியபாளையம் ஒத்தவாடை பைபாஸ் சாலையோரத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் பேப்பர் பொறுக்கி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இருப்பினும் அவரை கொன்றது யார் என கண்டறிய போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.
தொழிலாளி கைது
இதற்காக அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில் வில்லியனூர் புதுநகர் பகுதியை சேர்ந்த தொழிலாளி புண்ணியகொடி (40) என்பவர் கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சாலையோரத்தில் தூங்கி கொண்டிருந்த முதியவர் பீடி தராததால் ஆத்திரத்தில் அவர் மீது கல்லைப்போட்டு கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து புண்ணியகொடியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே கொலை செய்யப்பட்ட முதியவர் யார் என்று அடையாளம் காணும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.