அச்சக உரிமையாளரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை
கள்ளநோட்டு வழக்கில் அச்சக உரிமையாளரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
புதுவையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரான மோகன் கமல், சென்னை எண்ணூர் பிரதீப்குமார், ரகு, ராயபுரம் நாகூர் மீரான், தமீன் அன்சாரி, பழைய வண்ணாரபேட்டை சரண்ராஜ் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊட்டியை சேர்ந்த அச்சக உரிமையாளர் தாமஸ் (39) என்பவரை உருளையன்பேட்டை போலீசார் கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். அதைத்தொடர்ந்து அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த கோர்ட்டு தாமசை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தது. இதையடுத்து அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.