ஆங்கிலமே தொடர வேண்டும்: மாநிலங்களுக்கு இடையிலான தொடர்பு மொழியாக இந்தியை திணிக்கக்கூடாது

ஆங்கிலமே தொடர வேண்டும்: மாநிலங்களுக்கு இடையிலான தொடர்பு மொழியாக இந்தியை திணிக்கக்கூடாது டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பதிவு.

Update: 2022-04-08 23:32 GMT
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

மாநிலங்களுக்கு இடையிலான தொடர்பு மொழியாக இந்திய மொழியான இந்தி தான் இருக்க வேண்டும். ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி வர வேண்டும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதன் பொருள், மாநிலங்கள் மீது இந்தி திணிக்கப்படும் என்பதுதான்.

இந்தி இந்தியாவில் சற்று அதிகமாக பேசப்படும் மொழி. அதற்காக அதை மற்ற மாநிலங்கள் மீது திணிக்கக்கூடாது என்பதுதான் கிட்டத்தட்ட 85 ஆண்டுகளாக இந்தி பேசாத மாநிலங்கள் எழுப்பி வரும் குரல் ஆகும். அதை ஏற்றுத்தான் ஆங்கிலம் இணைப்பு மொழியாக தொடர நேரு அனுமதித்தார் என்பது வரலாறு. இந்தியாவின் மொழிதான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டுமானால், அந்த தகுதி நாட்டின் பழமையான மொழியான தமிழுக்குத்தான் உண்டு. ஆனாலும், மொழி திணிப்பில் தமிழகத்திற்கு விருப்பமில்லை என்பதால்தான் 8-வது அட்டவணை மொழிகள் அனைத்தையும் அலுவல் மொழியாக்கக் கோருகிறோம்.

இந்தியாவில் ஆங்கிலமே இணைப்பு மொழியாகத் தொடர வேண்டும். தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளும் அலுவல் மொழியாக்கப்பட வேண்டும். பிற மொழிகளை கற்கும் விஷயத்தில் அனைத்து மாநில மக்களின் விருப்பங்களும், உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்