மாணவர்கள் ஒரு மணி நேரமாவது விளையாட்டில் ஈடுபட வேண்டும்
உடல் ஆரோக்கியமாக இருக்க மாணவர்கள் ஒரு மணி நேரமாவது விளையாட்டில் ஈடுபட வேண்டும் என்று சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா கூறினார்.
உடல் ஆரோக்கியமாக இருக்க மாணவர்கள் ஒரு மணி நேரமாவது விளையாட்டில் ஈடுபட வேண்டும் என்று சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா கூறினார்.
வழிகாட்டல் நிகழ்ச்சி
காரைக்கால் திருநள்ளாறை அடுத்த தேனூரில் உள்ள சண்முகம் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட பெற்றோர்-ஆசிரியர் நலச்சங்கம், பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்புக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு பள்ளி துணை முதல்வர் விஜயமோகனா தலைமை தாங்கினார். மாவட்ட பெற்றோர்-ஆசிரியர் நலச்சங்க தலைவர் வின்சென்ட், செயலர் ரவிச்சந்திரன், துணைச் செயலர் நெல்சன், செயற்குழு உறுப்பினர் பிரேம்குமார், பள்ளி விரிவுரையாளர் குமாரி வெண்ணிலா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தாழ்வு மனப்பான்மை
சிறப்பு விருந்தினராக காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா கலந்துகொண்டு பேசியதாவது:-
உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் மனமும் சிறப்பாக இருக்கும். கடுமையான உழைப்பும், ஒழுக்கமும் ஒவ்வொரு மாணவருக்கும் முக்கியமானதாகும். அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலானோருக்கு தாங்கள் அரசுப் பள்ளியில் படிக்கிறோம், உயர்கல்விக்கு செல்ல முடியுமா என்ற தாழ்வு மனப்பான்மை காணப்படுகிறது.
இந்த எண்ணத்தை கைவிட்டு, நம்மாலும் முடியும் என்ற சிந்தனையை வளர்த்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் பள்ளியில் கல்வி, வீட்டில் செல்போன் என இருந்துவிடாமல் ஒருமணி நேரமாவது விளையாட்டில் ஈடுபடவேண்டும். நானும் அரசுப் பள்ளியில் படித்துத்தான் ஐ.பி.எஸ். அதிகாரியாக உள்ளேன். அதேபோல் ஏழையாக இருப்பது வளர்ச்சிக்கு தடை அல்ல.
மொழி ஆளுமை
குடிமைப் பணிக்கான தேர்வுக்கு மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். மாணவ பருவத்தில் அதற்கான தேடல்களில் மாணவர்கள் ஈடுபடவேண்டும். முக்கியமாக ஆங்கில மொழி ஆளுமையையும், ஆங்கில நாளிதழ்களை படிக்கும் பழக்கத்தையும் மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். மொழி ஆளுமை, உயர்கல்வி வேலைவாய்ப்பு பெறுவதற்கு சாதகத்தை ஏற்படுத்தும்.
பள்ளியில் படிக்கும்போதும், பள்ளிக் கல்வியை முடித்து உயர்கல்வி செல்லும்போதும் பல தவறான செயல்களில் ஈடுபடும் சூழல்கள் வர வாய்ப்புண்டு. அதை மாணவர்கள் அவசியம் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கணேஷ் குமார், உடற்கல்வி ஆசிரியர் ஏனாதி நாதன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.