தர்மபுரி: முதியவரின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.6.35 லட்சம் எடுத்து மோசடி..!
தர்மபுரியில் முதியவரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.6 லட்சத்து 35 ஆயிரம் எடுத்து மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
தர்மபுரி:
தர்மபுரி, இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நடேசன் (வயது 81). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு உள்ளது. இணையதள வசதியுடன் கூடிய வங்கி சேவையை இவர் பயன்படுத்தி வந்தார். அந்த சேவையை புதுப்பித்துக் கொள்வதற்காக செல்போன் மூலம் பதிவு செய்ய முயன்றார்.
அப்போது தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டபோது ஒரு செல்போன் எண்ணிலிருந்து அவருக்கு குறுந்தகவல் வந்தது. அதுதொடர்பான லிங்க்கை அழுத்தினார். அப்போது அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 6 லட்சத்து 34 ஆயிரத்து 999 மாயமானது.
மர்ம நபர்கள் போலியாக வாடிக்கையாளர் சேவை மைய லிங்க்கை அனுப்பி நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்டு இருப்பது அப்போது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நடேசன், இதுபற்றி தர்மபுரி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நடேசனின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.