மீன் கூடைகளுடன் வியாபாரிகள் திடீர் மறியல்

புதுவை பெரியமார்க்கெட் அருகே மீன் கூடைகளுடன் வியாபாரிகள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடை விதித்த போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2022-04-06 18:14 GMT
புதுவை பெரியமார்க்கெட் அருகே மீன் கூடைகளுடன் வியாபாரிகள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடை விதித்த போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மீன் விற்பனை
புதுவை பெரிய மார்க்கெட்டில் மீன் மார்க்கெட்டும் செயல்பட்டு வருகிறது. இங்கு மீன்கள் மொத்தமாக கொண்டுவந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
பெங்களூரு உள்பட பல்வேறு இடங்களில் இருந்து கொண்டுவரப்படும் மீன்கள் காந்திவீதி, நேரு வீதி பகுதிகளில் கொட்டப்படுகின்றன. இதை அதன் உரிமையாளர்கள் அங்கு வண்டிகளை நிறுத்தி சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகிறார்கள். 
இதுபோல் 200-க்கும் மேற்பட்ட சில்லரை வியாபாரிகள் கூடைகளில் வாங்கிக் கொண்டு சென்று மார்க்கெட்டுகள், வீதிகள் மற்றும் தெருக்களில் வீடுகளுக்கு நேரடியாக சென்று விற்கிறார்கள்.
போலீஸ் அனுமதி மறுப்பு
தற்போது நேருவீதியில் புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டுள்ள நிலையில் மீன் கழிவுகளை அப்படியே போட்டு விட்டுச் செல்வதால் துர்நாற்றம் வீசுவதாக பெரியகடை போலீசாருக்கு புகார்கள் சென்றன.
அதன்படி இன்று அதிகாலை அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் மீன் வண்டிகளை நிறுத்த தடை விதித்து மொத்த வியாபாரிகளை காந்தி வீதி மார்க்கெட் நுழைவாயிலுக்கு சென்று விற்குமாறு அறிவுறுத்தினர்.
இதை மீன் வியாபாரிகள் ஏற்க மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காந்தி வீதியில் மீன் கூடைகளை கீழே இறக்கி வைத்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் சில்லரை வியாபாரிகளும் சேர்ந்து கொண்டதால் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.
ரங்கசாமியை சந்திக்க முடிவு
இதையடுத்து அங்கு வந்த பெரியகடை போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதன் முடிவில் தற்காலிகமாக இப்போதைக்கு மீன்களை விற்றுக் கொள்ளுமாறு மொத்த வியாபாரிகளை போலீசார் அனுமதித்தனர்.
இதைத்தொடர்ந்து அங்கு சகஜ நிலை திரும்பியது. வழக்கம் போல் மீன் விற்பனையில் வியாபாரிகள் ஆர்வம் காட்டினர். 

மேலும் செய்திகள்