மூலப்பொருட்கள் விலை உயர்வை கண்டித்து தமிழகத்தில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடல்
தீப்பெட்டி உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தமிழகத்தில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
சென்னை,
தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப்பொருள்களான பாஸ்பரஸ், குளோரைட், மெழுகு, அட்டை, பேப்பர் உள்ளிட்ட மூலப்பொருள்களின் விலை அதிகரித்ததால், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தீப்பெட்டியின் விலையை 2 ரூபாயாக உயர்த்தினர்.
இருப்பினும் கடந்த 3 மாதங்களில் மீண்டும் தீப்பெட்டி உற்பத்தி மூலப்பொருள்களின் விலை 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை கடுமையாக உயர்ந்துள்ளதால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மேலும் நெருக்கடியை சந்திக்க தொடங்கினர். இது தொடர்பாக கடந்த மாதம் 31 ஆம் தேதி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தீப்பெட்டி உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, ஏப்ரல் 6 ஆம் தேதி(இன்று) முதல் ஏப்ரல் 17 ஆம் தேதி வரை தீப்பெட்டி தொழிற்சாலைகளை மூடி உற்பத்தியை நிறுத்த முடிவு செய்வது என்றும், சீனாவில் இருந்து இந்தியாவிற்கு அதிகளவில் வரும் லைட்டர்களை மத்திய அரசு தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்படி தமிழகம் முழுவதும் இன்று முதல் அனைத்து தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விருதுநகர் மாவட்டம் விருதுநகர், சாத்தூர், நெல்லை, தென்காசி, வேலூர் மாவட்டம் குடியாத்தம், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரி பட்டினம் ஆகிய ஊர்களில் 50 முழு இயந்திர தீப்பெட்டி ஆலைகள், 300 பகுதி நேர இயந்திர தீப்பெட்டி ஆலைகள் மற்றும் 2000-க்கும் தீப்பெட்டி பேக்கிங் சார்பு ஆலைகள் உள்ளிட்டவை முழுவதுமாக மூடப்பட்டுள்ளன.
மேலும் தீப்பெட்டி பண்டல்களும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் போராட்டத்திற்கு லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் 30 கோடி ரூபாய் தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்படுவது மட்டுமின்றி, 6 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.