வாங்குவதாக நடித்து புல்லட்டை ஓட்டி சென்று 75 நாட்கள் உல்லாசமாக சுற்றித்திரிந்த காதல் ஜோடி...!

சேலத்தில் கடந்த ஜனவரி மாதம் பைக் விற்பனை நிலையத்திற்கு வந்த காதல் ஜோடி புல்லட்டை ஓட்டிப்பார்ப்பதாக கூறி மாயமாகினர்.;

Update: 2022-04-06 08:13 GMT
சேலம்,

சேலம் மாவட்டம் தாதுபாய்குட்டை பகுதியில் பைக் விற்பனை செய்யும் கடை ஒன்று உள்ளது. அந்த கடைக்கு கடந்த ஜனவரி மாதம் 21-ம் தேதி இளம் காதல் ஜோடி ஒன்று வந்தது.

அந்த காதல் ஜோடி ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான புல்லெட்டை தேர்வு செய்து இது ஓட்டிப்பார்க்க வேண்டும் என கடை ஊழியரிடம் கூறினார். புல்லெட்டை வாங்குவார்கள் என்ற நம்பிக்கையில் அந்த ஜோடி புல்லெட்டை ஓட்டி பார்க்க கடை ஊழியர் சாவியை கொடுத்தார்.

புல்லெட்டை எடுத்துக்கொண்டு புறப்பட்ட காதலர் ஜோடி வெகுநேரம் ஆகியும் கடைக்கு திரும்பவில்லை. இருவரும் புல்லட்டுடன் மாயமாகிவிட்டனர்.

இதனையடுத்து, பைக்கை ஓட்டிப்பார்ப்பதாக எடுத்துக்கொண்டு மாயமாகிய காதல் ஜோடி குறித்து பைக் விற்பனை நிலைய ஊழியர் ராம்பாலாஜி சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, பைக்குடன் மாயமான காதல் ஜோடியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். புல்லட்டை திருடிக்கொண்டு மாயமானது காதலன் பிரவீன் மற்றும் அவரது காதலி பிரித்தி என்பது தெரியவந்தது. 

இந்நிலையில், புல்லட்டுடன் மாயமான காதல் ஜோடி 75 நாட்களுக்கு பின் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். மாயமான காதல் ஜோடி கர்நாடக மாநிலம் பங்காருபேட்டையில் உள்ள ஒரு வீட்டில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து பங்காருபேட்டைக்கு சென்ற போலீசார் அங்கிருந்த காதல் ஜோடி பிரவீன், பிரித்தியை கைது செய்தனர். மேலும், கைது செய்த காதல் ஜோடியை போலீசார் சேலம் அழைத்து வந்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிரவீன் (வயது 25) கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயல் மாவட்டம் பங்காருபேட்டை அருகே உள்ள காரன்னஹள்ளியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இவர் சேலம் காந்தி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். 

அதே ஓட்டலில் சேலம் பொன்னம்மாபேட்டை சேர்ந்தவர் பிரித்தி (22) வேலை பார்த்து வந்துள்ளார். ஒரே ஓட்டலில் வேலை பார்த்ததால் இருவரும் அடிக்கடி பேசிக்கொண்டனர். பின்னர் இவர்களுக்குள் காதல் மலர்ந்தது.

காதல் ஜோடி பிரவீன் - பிரித்தி தாதுபாய்குட்டை பகுதியில் உள்ள பைக் விற்பனை நிலையத்திற்கு விலை உயர்ந்த பைக்கை ஓட்டிப்பார்ப்ப வேண்டும் என கூறி அதை திருடி சென்றதும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட காதல் ஜோடியிடம் சேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்