சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் தொடக்கம்

தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூட இருக்கும் நிலையில், துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் தொடங்குகிறது. முதல் நாளில் நீர்வளத்துறை மீது நடக்கிறது.;

Update: 2022-04-05 23:20 GMT
சென்னை,

தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18-ந் தேதி 2022-2023-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் (19-ந் தேதி) வேளாண் பட்ஜெட் தாக்கலானது. இந்த நிலையில், பொது மற்றும் வேளாண் பட்ஜெட்டுகள் மீதான விவாதம் 21-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடந்து முடிந்தது.

இந்த நிலையில், துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடத்துவதற்காக, தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று (புதன்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. முதல் நாளில் நீர்வளத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

புதிய அறிவிப்புகள்

காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும், முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. கேள்வி நேரம் முடிந்ததும், நீர்வளத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் தொடங்குகிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள்.

உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகிறார். நிறைவாக, நீர்வளத்துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிடுகிறார்.

அ.தி.மு.க. திட்டம்

கேள்வி நேரத்துக்கும், மானிய கோரிக்கை விவாதத்துக்கும் இடைப்பட்ட நேரமில்லா நேரத்தில், சொத்து வரி உயர்வு, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்டவைகளை எழுப்ப பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. திட்டமிட்டு உள்ளது. இதனால், இன்றைய கூட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

மேலும் செய்திகள்