சென்னையில் 500 மாநகர பஸ்களில் அபாய பொத்தான்: அரசு போக்குவரத்து கழகம் அதிரடி நடவடிக்கை

சென்னை மாநகர பஸ்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும், கண்டக்டர் - பயணிகளுக்கு இடையே நடக்கும் வாக்குவாதங்களை தடுக்கவும் முதல் கட்டமாக 500 பஸ்களில் அபாய பொத்தான் மற்றும் கண்காணிப்பு கேமராக்களை மாநகர போக்குவரத்து கழகம் நிறுவி உள்ளது.;

Update: 2022-04-05 21:50 GMT
சென்னை,

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் 25 பணிமனைகள் மூலம் 696 வழித்தடங்களில் சுமார் 3 ஆயிரத்து 300 பஸ்களை இயக்கி வருகிறது. இதன் மூலம் 42 லட்சம் பயணிகளுக்கு சேவை அளிக்கப்படுகிறது. இதில் பெண் பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக பஸ்களில் அபாய பொத்தான்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு உள்ளது.

அத்துடன் சில வழித்தடங்களில் பஸ் கண்டக்டர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு பஸ்கள் இயக்கப்படுவதில் கால தாமதமும் ஏற்படுகிறது. அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான முறையிலும், அமைதியான வகையில் பஸ்கள் இயக்க புதிய தொழில் நுட்பங்கள் பஸ்களில் புகுத்தப்பட்டு வருகிறது.

500 பஸ்களில் அபாய பொத்தான்

இது குறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

மாநகர பஸ்களில் பெண் பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும், ஒரு சில இடங்களில் கண்டக்டர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே நடைபெறும் வாக்குவாதத்தில் தவறு செய்பவர்களை கண்டறியவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக பஸ்களில் நிர்பயா கார்பஸில் திட்ட நிதியின் கீழ் குறிப்பாக கோயம்பேடு- அண்ணாசதுக்கம் (வழித்தடம் எண் 27-பி), அண்ணாசதுக்கம்- பூந்தமல்லி (வழித்தடம் எண் -25), கோயம்பேடு- சிறுசேரி (வழித்தடம் எண்-76 வி), பெருங்களத்தூர்- கோயம்பேடு (வழித்தடம் 70-வி) உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் 500 பஸ்களில் முதல் கட்டமாக டிரைவர் இருக்கை, முன் மற்றும் பின்புறம் உள்ள வாசல்களில் தலா ஒரு கேமரா வீதம் 3 கண்காணிப்பு கேமரா மற்றும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருக்கைகள் அருகில் தலா 2 அபாய பொத்தான்கள் வீதம் 4 பொத்தான்கள் பொறுத்தப்பட்டு உள்ளது.

பெண் பயணிகள் நலன்

கல்லூரிகள் மற்றும் பெண்களின் நலன் கருதி அவர்கள் அதிகம் பயணிக்கும் பகுதிகளை இணைக்கும் வழித்தடங்களில் செல்லும் பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டு வருகிறது.

விரைவில், இந்த திட்டம் மாநகரில் இயக்கப்படும் மீதம் உள்ள 2 ஆயிரத்து 800 பஸ்களிலும் விரிவுபடுத்தப்படும். பஸ்களில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் பயணிகள் அபாய பொத்தானை ஒரு முறை அழுத்தியதும், பல்லவன் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக தலைமையகத்தில் உள்ள கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு எச்சரிக்கை அனுப்பப்படும்.

எந்த பஸ்சில் இருந்து அழைப்பு பெறப்பட்டதோ, அந்த பஸ்சில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் நேரலை காட்சிகளை தலைமையகத்தில் உள்ள குழுவினர் பார்த்து, உடனடியாக காவல் துறை உதவி எண்ணுக்கு புகார் அளிப்பார்கள். இதன் மூலம் ஆபத்தில் சிக்கிய பஸ் நிற்கும் இடத்திற்கு அருகிலுள்ள ரோந்து வாகனம் எந்த நேரத்திலும் அந்த இடத்தை அடைந்து அசம்பாவிதங்களை தடுக்க முடியும்.

குற்றவாளிகள் தப்ப முடியாது

பாதுகாப்பு நோக்கத்திற்காக பல செல்போன் பயன்பாடுகள் இருந்தாலும், பதிலளிக்கும் நேரம் மிக அதிகமாக உள்ளது மற்றும் எச்சரிக்கை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அடையும் முன் குற்றவாளி அந்த இடத்திலிருந்து தப்பிச் செல்லும் வாய்ப்பு உள்ளது.

ஆனால் தற்போதைய முறைப்படி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுவதால் குற்றவாளிகள் தப்ப முடியாது. பெண்களின் பாதுகாப்புக்கு மட்டுமின்றி, கண்டக்டர்கள் மற்றும் பயணிகளுக்கு இடையே ஏற்படும் மோதலில் தவறு செய்பவர்களை கண்டறியவும் புதிய கருவி உதவும்.

அபாய பொத்தான் குறித்து பயணிகளுக்கு போதிய விழிப்புணர்வு அளிக்கவும் கண்டக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பயணிகள் தரப்பில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்