சொத்துவரி உயர்வு மக்களுக்கு கசப்பு மருந்து தான் - அமைச்சர் சேகர்பாபு
நோய் தீர கசப்பு மருந்து எப்படி இருக்குமோ, அது போல் தான் சொத்து வரி உயர்வை மக்கள் பார்க்க வேண்டும் என இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.;
சென்னை,
இந்து சமய அறநிலைத்துறை தலைமை அலுவலகமான நுங்கம்பாக்கத்தில், அத்துறையின் மண்டல அலுவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன், அமைச்சர் சேகர்பாபு இன்று ஆலோசனை நடத்தினார்.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது:-
தமிழகத்தில் கும்பாபிஷேகம், குடமுழுக்கு நடத்த வேண்டிய கோவில் நிலையை கண்டறிந்து அதற்கான பணிகளை விரைவுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் முயற்சியில் இந்து சமய அறநிலைத்துறை ஈடுபட்டுள்ளது.
அனைத்து பெரிய கோயில்களிலும் தமிழ் அர்ச்சனை நடக்க வேண்டும் என்பதுதான் கொள்கை. திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் தமிழ்மொழி அர்ச்சனை முறையாக நடக்க உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
சொத்து வரி உயர்வு மக்களுக்கு சிறு சுமை என்றாலும், நோய் தீர கசப்பு மருந்து எப்படி இருக்குமோ, அது போல் தான் சொத்து வரி உயர்வை பார்க்க வேண்டும். எந்த ஒரு சுமையும் மக்கள் மீது வரும்பொழுது, அதை பரிசீலித்து முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கையை மேற்கொள்வார். தமிழ்நாட்டிற்கு 5 லட்சம் கோடி கடன் இருக்கிறது, நாள் ஒன்றுக்கு 23 கோடி வட்டிகட்ட வேண்டியுள்ளது
இவ்வாறு அவர் கூறினார்.