சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறப்பு
சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று (திங்கட்கிழமை) முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது.;
தண்டராம்பட்டு,
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணையின் இடது மற்றும் வலதுபுற கால்வாய்கள் மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெற்று வருகின்றன.
இதேபோல திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பகுதியிலுள்ள 5 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெற்று வருகிறது. இவைத்தவிர 105 ஏரிகளும் நீர் ஆதாரத்தை பெற்று வருகின்றன.
தற்போது அணையின் நீர்ப்போக்கு மதகுகளில் 20 அடி உயர இரும்பு ஷட்டர்கள் புதிதாக அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அணையின் உயரமான 119 அடி உயரத்திற்கு இந்த ஆண்டு நீரைத்தேக்கி வைக்க முடியவில்லை.
தற்போது கோடைகாலம் என்பதால் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், பாசன வசதி பெறும் நிலங்களின் அருகில் உள்ள 105 ஏரிகள் நீராதாரம் பெரும் வகையிலும் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற மே மாதம் 19-ந்தேதி வரை அணையின் இடது மற்றும் வலது புற கால்வாய் மூலம் தண்ணீரை திறந்துவிட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று காலை 9 மணி அளவில் பாசனத்திற்காக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தண்ணீரை திறந்து விடுகிறார். வலதுபுற கால்வாய் மூலம் வினாடிக்கு 622.80 கன அடி தண்ணீரும், இடதுபுற கால்வாய் மூலம் 544.32 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.
இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் 34 ஏரிகளும், விழுப்புரம் மாவட்டத்தில் 56 ஏரிகளும், திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பகுதியில் 15 ஏரிகளும் என மொத்தம் 105 ஏரிகள் பயன்படுவதோடு, 12 ஆயிரத்து 643 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெற உள்ளன.