பாகூரில் 28 பேருக்கு டெங்கு பாதிப்பு

புதுவையில் கொசுத்தொல்லையால் இரவில் தூக்கமின்றி மக்கள் தவித்து வருகின்றனர். பாகூர் பகுதியில் சமீபத்தில் 28 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.;

Update: 2022-04-03 17:21 GMT
புதுவையில் கொசுத்தொல்லையால் இரவில் தூக்கமின்றி மக்கள் தவித்து வருகின்றனர். பாகூர் பகுதியில் சமீபத்தில் 28 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொசுத்தொல்லை
கோடைகாலம் தொடங்கி உள்ள நிலையில் புதுவையில் வெயில் கொளுத்தி வருகிறது. காலை 9 மணிக்கே வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் உள்ளது. இதனால் பொதுமக்கள் மாலை வேளைகளில் வீட்டிற்கு வெளியே வந்தும், மொட்டை மாடிகளிலும் காற்று வாங்கி வருகிறார்கள். அங்கும் மக்கள் நிம்மதியாக இருக்க முடியவதில்லை. இதற்கு காரணம் கொசுக்கள் தான்.
மாலை நேரங்களில் கூட்டம் கூட்டமாக பறந்து வரும் கொசுக்கள் வீட்டிற்கு வெளியே நிற்பவர்களையும், மொட்டை மாடியில் காற்று வாங்குபவர்களையும் கடிக்கிறது. இதனால் வெளியில் இருப்பதை தவிர்த்து வீட்டிற்குள்ளேயே மக்கள் முடங்குகின்றனர். வீடுகளில் கொசுக்களை ஒழிக்கும் பேட்டுடன் பலர் இருக்கம் காட்சியை பார்க்க முடிகிறது. கொசுமருந்து பயன்படுத்தினால் பலருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது.
தூக்கமின்றி தவிப்பு
கொசு தொல்லையில் இருந்து தப்பிக்க வீட்டின் கதவு, ஜன்னல்களை பூட்டிக்கொள்கின்றனர். ஆனால் வெயிலின் தாக்கத்தால் இரவு நேரங்களில் புழுக்கம் அதிகமாக உள்ளது. மின்விசிறியை ஓடவிட்டாலும் வெப்ப காற்றே வருகிறது. இதை தவிர்க்க ஜன்னல்களை திறக்கும்போது, கொசுக்கள் உள்ளே புகுந்து கடிக்கிறது. இதனால் நள்ளிரவு வரை தூக்கமின்றி மக்கள் தவிக்கின்றனர். கொசுத்தொல்லையால் குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள், முதியவர்கள் அதிகம் பாதிக்கின்றனர்.
கொசுக்களினால் பரவும் டெங்கு உள்ளிட்ட நோய்களின் தாக்கமும் தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. பாகூரில் ஒரே பகுதியில் 28 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் முகாம்கள் நடத்தப்பட்டது. இதேபோல் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சால் அதிகமாக பரவி வருகிறது.
கொசு ஒழிப்பு நடவடிக்கை
கொரோனாவின் தாக்கத்தின் இருந்து முற்றிலும் விடுப்பட்ட புதுச்சேரி மக்களுக்கு தற்போது பரவி வரும் டெங்கு அச்சுறுத்தலாக உள்ளது. நகர பகுதி முழுவதும் கழிவுநீர் வாய்க்கால்கள் கட்டப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை, நகராட்சி ஊழியர்கள் அதனை எவ்வளவு தான் தூர்வாரினாலும் பொதுமக்கள் சிலர் அலட்சியமாக பிளாஸ்டிக் குப்பைகளை கழிவுநீர் வாய்க்கால்களில் வீசி செல்வதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு தற்போது கொசு உற்பத்தி அதிகரித்து, அதனால் பரவும் நோய்களும் பெருகி வருகிறது.
இந்த கொசுத்தொல்லையை போக்கிட அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மக்களின் துயரத்தை போக்கிட பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை இணைந்து கொசு ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 
விழிப்புடன் இருக்க வேண்டும்
இது குறித்து சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலுவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ளது. எனவே மக்கள் தங்கள் தேவைக்கு பாத்திரங்களில் நல்ல தண்ணீரை பிடித்து வைக்கின்றனர். ஆனால் அதனை சரியாக மூடி வைப்பது இல்லை. நல்ல தண்ணீர் மூலமாக தான் டெங்கு கொசு பரவுகிறது. பாகூர் பகுதியில் டெங்கு வேகமாக பரவியது. சுகாதாரத்துறை சார்பில் வீடு வீடாக பரிசோதனை நடத்தப்பட்டு தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
புதுச்சேரி முழுவதும் கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கும்படி தூர்வார பொதுப்பணித்துறை, நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களும் கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி வருகின்றனர். மேலும், தேவைப்படும் இடங்களில் கொசு மருந்தும் அடிக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் நிலமை முழுவதும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்