சூறாவளி காற்றால் 10 ஆயிரம் வாழைகள் சேதம் - விவசாயிகள் கவலை....!

திருவையாறு சுற்றுவட்டார பகுதிகளில் வீசிய சூறாவளி காற்றால் 10 ஆயிரம் வாழைகள் சேதம் அடைந்துள்ளது.;

Update: 2022-04-03 14:15 GMT
திருவையாறு,

தஞ்சாவூர் மாவட்டத்தில், காவிரி படுகை பகுதியில் நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக வாழை பயிரிடப்பட்டு வருகிறது. குறிப்பாக திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, நடுக்காவேரி, நடுப்படுகை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று மாலை மழையுடன் கூடிய சூறாவளி காற்று சுமார் அரைமணி நேரம் வீசியது. இதனால் திருவையாறு அருகே வடுககுடி, ஆச்சனூர், மருவூர், நடுப்படுகை உள்ளிட்ட பகுதிகளில், வாழைத்தார் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்து சுமார் 10 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து கிழே விழுந்தது.

இந்த வாழைத்தார்கள் அனைத்தும் இன்னும் ஒரிரு மாதங்களில் அறுவடை செய்தால் உரிய விலைக்கு விற்கலாம். ஆனால் தற்போது சூறாவளி காற்றால் வாழைமரங்கள் முறிந்து சேதமானதால், வாழைக்காய்கள் முதிர்ச்சி அடையாமல் உள்ளது. 

இதனால் இப்பகுதியில் வாழை பயிரிட்ட விவசாயிகளுக்கு சுமார் ரூ. 50 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வாழை விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்