திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் எச்சரிக்கை
திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.;
திருப்பூர்,
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' திரைப்படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியானது.
தமிழ்நாட்டில் உள்ள சில திரையரங்குகளில் சிறப்பு காட்சியாக பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் ஒளிபரப்பப்பட்டது. அப்போது நெல்லையில் உள்ள திரையரங்கு ஒன்றில் பீஸ்ட் டிரைலர் பார்க்க குவிந்த ரசிகர்கள் ஆர்வ மிகுதியில் திரையரங்கின் கண்ணாடி, நாற்காலிகளை சேதப்படுத்தியுள்ளனர்.
நுழைவாயிலில் இருந்து ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு உள்ளே சென்றதில் கண்ணாடி உடைந்ததாகவும் டிரைலர் பார்த்த உற்சாகத்தில் இருக்கைகள் மீது ஏறி ஆடியதில் நாற்காலிகள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இது குறித்து ஆடியோ வெளியிட்டுள்ள திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன், இலவசமாக டிரைலர் வெளியிடும்போது ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு திரையரங்க உரிமையாளர்களே பொறுப்பேற்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், இதனால் பிரச்சினைகள் ஏற்படும்போது திரையரங்கு உரிமத்தை இழக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.