இரட்டை சகோதரிகளுக்கு பாலியல் தொந்தரவு - வாலிபருக்கு 67 ஆண்டு சிறை..!

அவினாசி அருகே 6 வயது இரட்டை சகோதரிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கூலித்தொழிலாளிக்கு 67 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.;

Update: 2022-04-01 01:50 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே சேவூரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 32). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு 6 வயதுடைய 1-ம் வகுப்பு படித்து வந்த இரட்டை சகோதரிகளை சாக்லெட் கொடுப்பதாக கூறி தனியாக அழைத்துச்சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து உங்களது தாயாரிடம் தெரிவித்தால் அவரை கொலை செய்து விடுவேன் என்று பிரகாஷ் அந்த சிறுமிகளை மிரட்டியுள்ளார். ஒரு மாதமாக இவ்வாறு சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் சிறுமிகள் தனது தாயாரிடம் இதுகுறித்து கூறினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் சைல்டுலைன் அமைப்புக்கு  (1098)  புகார் தெரிவித்தார். பின்னர் 23.6.2020 அன்று அவினாசி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அந்த தீர்ப்பில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்த குற்றத்துக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, தொடர்ச்சியாக மிரட்டி பாலியல் தொந்தரவு செய்த குற்றத்துக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, மிரட்டி பாலியல் தொந்தரவு செய்த குற்றத்துக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, கொலைமிரட்டல் விடுத்த குற்றத்துக்கு 7 ஆண்டு சிறை தண்டனை என 67 ஆண்டு சிறை தண்டனை பிரகாசுக்கு விதிக்கப்பட்டது.

மேலும் ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சுகந்தி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வக்கீல் ஜமீலாபானு ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்