மத்திய அரசை உரசிப்பார்த்து தி.மு.க. அரசியல் செய்ய வேண்டாம் - அண்ணாமலை பேட்டி

‘மத்திய அரசை உரசிப்பார்த்து தி.மு.க. அரசியல் செய்யவேண்டாம்’ என்றும், ‘இது வேறு மாதிரியான அரசு’ என்றும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசினார்.;

Update: 2022-03-30 23:01 GMT
சென்னை,

தி.மு.க.வை பொறுத்தவரை பொய் சொல்வதில் தற்போது வல்லவர்களாகி விட்டனர். அரசியலில் கருத்தியல் ரீதியாக எங்களுடன் மோத முடியாமல் கட்டுக்கதையை அவிழ்த்து விடுகிறார்கள். கர்நாடகாவில் நான் போலீஸ் அதிகாரியாக இருக்கும்போது சித்தராமையா ஆட்சியை கலைத்தேன் என்பதுபோல, தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார். கர்நாடகாவில் சித்தராமையாவுடன் 5 ஆண்டு காலம் முழுமையாக பணியாற்றி இருக்கிறேன். சித்தராமையாவுக்கு பிறகு குமாரசாமி முதல்-மந்திரியாக வந்தபோதும், அவரிடமும் பணியாற்றி இருக்கிறேன். எனது ராஜினாமா கடிதத்தை அவர் ஏற்காதபோதும், அடம்பிடித்து ராஜினாமா செய்துவிட்டு வந்தேன்.

ஆர்.எஸ்.பாரதி உள்பட தி.மு.க.வினர் தினமும் புதுசு புதுசாக கதை விடுகிறார்கள். அவர்கள் எத்தனை கதை சொன்னாலும் சரி, அவர்களை கேள்வி கேட்பதை நாங்கள் விடப்போவது கிடையாது. தயவு தாட்சணியமின்றி அவர்கள் செய்யும் தவறை மக்கள் மன்றத்தில் எடுத்துரைப்போம்.

பா.ஜ.க.வின் ‘பியூட்டி’

குறிப்பாக எனது பதவி பறிபோக போவதாகவும், டெல்லியில் இருந்து இதற்கான தகவல் வந்துள்ளதாகவும் தி.மு.க.வினர் கூறி வருகிறார்கள். பா.ஜ.க.வின் ‘பியூட்டி’ என்னவென்றால், நிரந்தரமாக ஒரு தலைவர் கட்சிக்கு இருந்தால் ஜனநாயகம் வளராது என்பதுதான். தி.மு.க.வில்தான் நிரந்தர தலைவர் என்ற ஒன்றை வைத்துக்கொண்டு ஜனநாயகத்தை சிதைத்து கொண்டிருக்கிறார்கள். இந்த கட்சியில் எனக்கு முன்பு இருந்த தலைவர்கள் கட்சியை சிறப்பான நிலைக்கு கொண்டுவந்திருக்கிறார்கள்.

எனக்கு அடுத்து வரக்கூடிய தலைவர்கள் இந்த கூட்டத்திலேயே (சுற்றி இருக்கக்கூடிய பா.ஜ.க. நிர்வாகிகள்-தொண்டர்களை சுட்டிக்காட்டி) இருக்கலாம். ஒரு சாமானியனையும் பிடித்து கட்சி தலைவராக்கி, ஏன் பிரதமராகவே ஆக்கி அழகுபார்க்கும் அற்புதம் பா.ஜ.க.வுக்கு மட்டுமே உண்டு.

எனவே நான் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். நிச்சயம் கட்சியின் அடுத்த தலைவர்களாக அவர்கள் வரவேண்டும். ஏன் அடுத்த பிரதமராக, அடுத்த தமிழக முதல்-அமைச்சராக வரவேண்டும் என்றால், ஆர்.எஸ்.பாரதி கூறியதை ஏற்றுக்கொண்டபடி, பா.ஜ.க. கட்சிக்கு வந்துவிடுங்கள். பா.ஜ.க.வுக்கு இளைஞர்கள் வந்தால்தான் எனது பதவி காலியாகும். இன்னொரு இளைஞருக்கு அந்த பதவி கிடைக்கும். அவரை தொடர்ந்து அந்த பதவி இன்னொரு இன்னொருவருக்கு கிடைக்கும். அதுதான் பா.ஜ.க.வின் சித்தாந்தம்.

வழக்குகளில் சிக்கியுள்ள அமைச்சர்கள்

என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்து என்னை முடிந்தால் கைது செய்யுங்கள் என்று கமலாலயத்தில் 7 மணி நேரம் காத்திருந்தேன். ஆனால் போலீசார் வரவில்லை. ஒருவேளை சென்னை போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டார்களா? என தெரியவில்லை. தி.மு.க.வினர் எனது வாழ்க்கையை புரட்டி போட்டுவிட்டார்கள்.

ஊரில் உள்ள எனது விவசாய நிலத்தில் வேலி போட்டிருக்கிறேனா? அரசு நிலத்தில் அந்த வேலி உள்ளதா? என்று எல்லாமே அளந்து பார்த்துவிட்டார்கள். நான் பணியாற்றிய இடங்களுக்கும் நேரில் சென்று, சந்தித்த வழக்குகள், சந்தித்த ஆட்கள், விசாரணைகள் என அனைத்தையுமே முழுமையாக ஆய்வு செய்துவிட்டார்கள். என்னதான் என் வாழ்க்கையை புரட்டி பார்த்தாலும்கூட ஒரு கடுகளவு கூட குற்றத்தை கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால் நான் வாழ்கிற வாழ்க்கை அப்படிப்பட்ட வாழ்க்கை. இந்த தைரியம் பா.ஜ.க.வில் இருந்தால் மட்டுமே வரும்.

தேவைப்படும்போது நான் கைது செய்யப்படுவேன் என்று சொல்லியிருக்கிறார்கள். நான் இப்போது சொல்கிறேன். தேவைப்படும்போது தி.மு.க.வில் பாதி பேர் சிறையில் இருப்பார்கள். மத்திய அரசின் அமலாக்கப்பிரிவு வழக்குகளில் இப்போதைய அமைச்சர்கள் எத்தனை பேர் சிக்கியிருக்கிறார்கள் தெரியுமா?. 2ஜி வழக்கில் எத்தனை அமைச்சர்கள் மீது வழக்கு உள்ளது என தெரியுமா?.

உரசிப்பார்க்க வேண்டாம்

நாங்கள் காழ்ப்புணர்ச்சி காரணமாக பேசவில்லை. அமலாக்கப்பிரிவு தொடர்ந்துள்ள வழக்கில் இப்போதைய அமைச்சர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த முக்கியமான அமைச்சருக்கு கடந்த வாரம் ‘சம்மன்’ வந்திருக்கிறது. அவரும் ஆஜராக 2 வார அவகாசம் கேட்டுள்ளார். இது ஆர்.எஸ்.பாரதிக்கு தெரியுமா?.

மத்திய அரசு வேறு மாதிரியான அரசு. இதை உரசிப் பார்த்து, ஒட்டி பார்த்து சும்மா ஒரு அரசியலை செய்திட முடியாது. ஒரு பேச்சு பேசினால் அதற்கு ஆயிரம் அர்த்தம் இருக்கும். அதையெல்லாம் அவர்கள் யோசித்து பார்த்து கொள்ளட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ.க. மையக்குழு கூட்டம்

முன்னதாக சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்தில் பா.ஜ.க. மையக்குழு கூட்டம் நடந்தது.

இதில் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, மத்திய இணை மந்திரி எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை, துணைத்தலைவர் வி.பி.துரைசாமி, பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி, முன்னாள் தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்