3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

டெல்லி திமுக அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அழைப்பிதழ் வழங்குகிறார்.

Update: 2022-03-30 17:17 GMT
கோப்புப்படம்
சென்னை,

டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலய திறப்பு விழா, வரும் ஏப்.2-ம் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு டெல்லி புறப்பட்டு சென்றார். 

டெல்லியில் நாளை (31.3.2022) பிற்பகல் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது, நீட், மேகதாது அணை, ஜிஎஸ்டி நிலுவைத் தொகை உள்ளிட்டவை குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், டெல்லியில் ஏப்ரல் 2-ந் தேதி புதிதாக திறக்கப்படும் அண்ணா-கலைஞர் அறிவாலய திறப்பு விழாவில் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கிறார்.

அதைத் தொடர்ந்து, நாளை மாலை மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின்கட்காரி, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.

ஏப்ரல் 1-ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்களையும் சந்தித்து பேசுகிறார். அப்போது, திமுக அலுவலக கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுவிக்க உள்ளார். ஏப்ரல் 2-ம் தேதி திமுக அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த விழாவை முடித்துக் கொண்டு, ஏப்ரல் 2ம் தேதி இரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

மேலும் செய்திகள்