பஞ்சு விலை ஒரு ஆண்டில் 2 மடங்கு அதிகரிப்பு - ஜவுளி தொழில் பாதிப்பு
பஞ்சு விலை கடந்த ஒரு ஆண்டில் 2 மடங்கு அதிகரித்துள்ளதால் ஜவுளி தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.;
சென்னை,
இந்தியாவில் ஆண்டுக்கு 330 முதல் 360 லட்சம் பேல் (Bale) பஞ்சு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் பயிரிட முடியாத மிக நீண்ட இழை கொண்ட பஞ்சு ரகம் ஆண்டுக்கு 15 முதல் 20 லட்சம் பேல் அளவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.
கடந்த 2021 பிப்ரவரியில் பஞ்சு விலை ஒரு கேண்டி (Candy) ரூ.44,500 ஆக இருந்தது. இது 2022 மார்ச் மாதத்தில் ரூ.90,000 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக நூல் விலை வெகுவாக அதிகரித்து கோவை, திருப்பூர், கரூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
2022-23 பட்ஜெட்டில் பஞ்சு இறக்குமதிக்கு 11 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. நூல் விலையை கட்டுப்படுத்த பஞ்சு மீதான 11 சதவீத இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.