வேளச்சேரியில் ரூ.5¾ கோடியில் மழைநீர் வடிகால் பணி முதல்-அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

வேளச்சேரியில் ரூ.5¾ கோடி செலவில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;

Update: 2022-03-29 21:59 GMT
சென்னை,

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று ஆய்வு செய்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தி, போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டு பணிகளும் விரைவாக நடைபெற்றன.

வரும் பருவமழை காலங்களில் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் அதிக அளவில் நீர் தேங்கும் இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள சிங்கார சென்னை 2.0 திட்டம், உலக வங்கி நிதி மற்றும் கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதிகளில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டம் ஆகியவற்றின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து திட்டப்பணிகளை உடனடியாக தொடங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

இந்த நிதியின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட வேளச்சேரி பிரதான சாலையில் 2 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பில் 915 மீட்டர் நீளத்திற்கு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளையும், காந்தி தெரு, சீதாபதி நகர் 2-வது குறுக்கு தெருவில் 3 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பில் 1,500 மீட்டர் நீளத்திற்கு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வருகின்ற பருவமழை காலத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

ஆய்வின் போது பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, ஹசன் மவுலானா எம்.எல்.ஏ., சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் சி.விஜயராஜ் குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்