வேன் மோதி பள்ளி மாணவன் உயிரிழந்த விவகாரம்: வேன் ஓட்டுநர், பணிப்பெண்ணுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

வளசரவாக்கம் அருகே தனியார் பள்ளிக்கூட வளாகத்துக்குள் வேன் மோதிய விபத்தில் சக்கரத்தில் சிக்கி 2-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக பலியானான்.

Update: 2022-03-29 04:27 GMT
சென்னை,

சென்னை, வளசரவாக்கத்தில் வேன் மோதி பள்ளி மாணவன் தீக்‌சித் உயிரிழந்த விவகாரத்தில்  வேன் ஓட்டுநர் பூங்காவனம், பணிப்பெண் ஞான சக்தி ஆகியோரை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஓட்டுநர் பூங்காவனம், பணிப்பெண் ஞான சக்தி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

வேன் மோதி 2-ம் வகுப்பு மாணவன் பலியான முழு விவரம்:-

சென்னை விருகம்பாக்கம் வேம்புலி அம்மன் கோவில் தெருவில் உள்ள இளங்கோ நகர் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 35). இவரது மனைவி ஜெனிபர் (27). கணவன், மனைவி இருவரும் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வருகின்றனர். இவர்களது ஒரே மகன் தீக்‌சித் 7

சென்னை வளசரவாக்கம் அடுத்த ஆழ்வார்திருநகர் பகுதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஷ்வரா என்ற தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில், நேற்று காலை வழக்கம் போல் வீட்டில் இருந்து புறப்பட்ட பள்ளி வேனில் ஏறிய தீக்‌ஷித், மாணவர்களுடன் பள்ளிக்கு புறப்பட்டான். வேனில் 13 மாணவர்கள் இருந்தனர். வேனை முகலிவாக்கத்தை சேர்ந்த டிரைவர் பூங்காவனம் (வயது 64) என்பவர் ஓட்டி வந்தார். இதையடுத்து, காலை 8:30 மணியளவில் பள்ளி வளாகத்துக்குள் சென்று நின்ற வேனில் இருந்த மாணவர்கள் அனைவரும் இறங்கி வகுப்பறைகளுக்கு செல்ல ஆரம்பித்தனர்.

மாணவர்களை வேனில் இருந்து இறக்கி வகுப்பறைகளுக்கு அழைத்து செல்லும் பணியை பள்ளி வாகனத்தில் மாணவர்களுடன் உடன் பயணம் செய்த ஞானசக்தி என்ற பெண் உதவியாளர் செய்து கொண்டிருந்தார்.

இதற்கிடையே வேனில் இருந்து கடைசியாக இறங்கிய மாணவன் தீக்‌ஷித் முன்னோக்கி சென்றான். அப்போது மாணவர்கள் அனைவரும் இறங்கி சென்று விட்டார்கள் என நினைத்த டிரைவர் பூங்காவனம், வாகனத்தை வேறு இடத்தில் நிறுத்துவதற்காக வேனை முன்னோக்கி இயக்கியபோது, வாகனத்தின் முன்பகுதி தீக்சித் மீது மோதியதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்தான். அப்போது அவன் உடல் மீது வேனின் முன்சக்கரம் ஏறி இறங்கியதில் ரத்தவெள்ளத்தில் மயங்கி உயிருக்கு போராடினான். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் விரைந்து சென்று மாணவனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவன் தீக்‌ஷித் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மாணவனின் பெற்றோர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வளசரவாக்கம் போலீசார் விபத்து நடந்த பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து இறந்து போன மாணவன் தீக்‌ஷித் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் நடந்த பள்ளி வளாகத்தில் துணை கமிஷனர்கள் பிரதீப், மீனா, உதவி கமிஷனர் கலியன், இன்ஸ்பெக்டர் ஆப்ரகாம் குரூஸ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

விபத்துக்குள்ளான வாகனத்தை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு எடுத்து வந்தனர். போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாணவன் உயிரிழப்புக்கு காரணமான வாகனத்தை தடயவியல் சோதனை அதிகாரிகள் சோதனை செய்தனர். பள்ளி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை, வருவாய் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதையடுத்து பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்களை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து வந்து அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில் பள்ளியில் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா? வாகனம் தரமான நிலையில் உள்ளதா? என்பது குறித்து வருவாய்துறை அதிகாரிகளும், வட்டார போக்குவரத்து அதிகாரிகளும் ஆய்வு செய்தனர். இறந்து போன மாணவனின் உடலை பார்த்து அவனது பெற்றோர் கதறி அழுதபடி சென்ற காட்சி பார்ப்போரின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக முதல் கட்டமாக விபத்து ஏற்படுத்திய பள்ளி வேன் டிரைவர் பூங்காவனம் (வயது 60) மற்றும் பெண் ஊழியர் ஞானசக்தி (34), ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அதுமட்டுமின்றி பள்ளியின் தாளாளர் ஜெயசுபாஷ், பள்ளியின் முதல்வர் தனலட்சுமி ஆகிய 2 பேரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி முதல்வரிடம் போலீசார் தொட ர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்