கடலூரில் பயங்கரம்: ஆண் நண்பருடன் சென்ற இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை..!
கடலூரில் ஆண் நண்பருடன் சென்ற இளம் பெண்ணை 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர்,
கடலூர் செம்மண்டலம் பகுதியில் நேற்று நள்ளிரவு 21 வயது பெண் ஒருவர் பஸ் நிறுத்தத்தில் தனியாக நின்றார். அப்போது போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) ஆரோக்கியராஜ் தலைமையில் போலீசார் ரோந்து வந்தனர். தனியாக நின்ற பெண்ணை போலீசார் சென்று பார்த்த போது அவர் அழுது கொண்டிருந்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அந்த பெண் போலீசாரிடம் கூறியதாவது:-
கடலூர் கம்மியம்பேட்டை பகுதியில் தனது காதலனுடன் பேசிக்கொண்டிருந்த போது, 3 வாலிபர்கள் எங்களிடம் ரகளையில் ஈடுபட்டனர். பின்னர் என்னையும் எனது காதலனையும் ஒன்றாக சேர்த்து வைத்து செல்போனில் படம் பிடித்து வெளியில் காண்பித்து விடுவோம் என மிரட்டினர்.
பின்னர் திடீரென்று எனது காதலனை 2 நபர்கள் வலுக்கட்டாயமாக பிடித்துக்கொண்டனர். பின்னர் அவர்களில் ஒருவர் வலுக்கட்டாயமாக என் காதலன் முன்பு பாலியல் வன்கொடுமை செய்தான். அதன் பின்னர் மீதமுள்ள 2 பேரும் என்னை பலவந்தமாக வன்கொடுமை செய்தனர். பின்னர் 3 பேரும், என்னையும் என் காதலனையும் மிரட்டி, இங்கு நடந்த சம்பவம் தொடர்பாக நீங்கள் யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டி அனுப்பினர் என கதறியபடி தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து போலீசார் உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனைக்கு பெண்ணை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் பெண்ணின் காதலனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த 3 நபர்கள் யார் என காதலனிடம் விசாரித்த போது அவர் யார் என தெரியவில்லை என கூறினார்.
இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் சந்தேகப்படும் நபர்களை அழைத்து விசாரணை நடத்தினர். அதில் சந்தேகத்தின் பேரில் கும்பகோணத்தை சேர்ந்த சதீஷ்(19 வயது), சபரி என்கிற கிஷோர் (19) உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். பின்னர் 3 வாலிபர்களையும் காதலனிடம் காண்பித்தனர்.
அப்போது காதலியை பாலியல் வன்கொடுமை செய்த 3 நபர்கள் இவர்கள் தான் என அடையாளம் காண்பித்தார். மேலும் காதலனிடம் இருந்து பறித்த செல்போன் ஒரு நபரின் வீட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மூன்று பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஆண் நண்பருடன் சென்ற இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.