மக்கள் அனுமதி இல்லாமல் ஒரு பிடி மண்ணை கூட எடுக்க விடமாட்டோம் அன்புமணி ராமதாஸ் பேச்சு

என்.எல்.சி. சுரங்கம் என்ற பெயரில் நிலங்களை பறிப்பதா?, மக்கள் அனுமதி இல்லாமல் ஒரு பிடி மண்ணை கூட எடுக்க விடமாட்டோம் என்று கருத்துக்கேட்பு கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.

Update: 2022-03-27 22:13 GMT
விருத்தாசலம்,

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் நிலக்கரி தோண்டி எடுப்பதற்காக புதிதாக 3-வது சுரங்கம் அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக நிலத்தை கையகப்படுத்தும் பணியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்தநிலையில் நெய்வேலி சுரங்கம் என்ற பெயரில் நிலங்களை பறிப்பதா? என்ற தலைப்பில் விருத்தாசலம் அடுத்த சிறுவரப்பூரில் பா.ம.க. சார்பில் மக்கள் சந்திப்பு மற்றும் கருத்துக்கேட்பு கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்தில் மாநில தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, வக்கீல் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

என்.எல்.சி.க்கு கண்டனம்

இந்த மண்ணை நம்பிதான் நீங்களும், உங்கள் குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் இவ்வளவு ஆண்டுகாலமாக வாழ்ந்து வருகிறீர்கள். ஆனால் எப்படியாவது இந்த மண்ணை பிடுங்கி எடுப்போம் என்று என்.எல்.சி நிர்வாகம் கங்கணம் கட்டியிருக்கிறது.

பா.ம.க. என்றுமே வளர்ச்சிக்கு எதிரான கட்சி கிடையாது. நமக்கு வளர்ச்சி தேவை. வாழ்வாதாரத்தை, விவசாய நிலத்தை பிடுங்கி, வளர்ச்சி என்ற போர்வையில் என்.எல்.சி. நிறுவனம் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

ஒருபிடி மண்ணை கூட எடுக்க முடியாது

கருத்து கேட்டபோது சிலர் உணர்ச்சிவசப்பட்டு கருத்துகளை தெரிவித்துள்ளீர்கள். நாங்கள் ஒருபிடி மண்ணை கூட தரமாட்டோம் என கூறியுள்ளீர்கள். உங்களுக்கு பாதுகாவலராக டாக்டர் ராமதாஸ் இருக்கிறார். அவருடைய கட்டளைபடிதான் நான் இங்கு வந்துள்ளேன்.

உறுதியாக உங்களிடம் ஒன்று சொல்லிக்கொள்கிறேன். உங்கள் அனுமதி இல்லாமல் இங்கிருந்து ஒரு பிடி மண்ணை கூட என்.எல்.சி. நிர்வாகம் எடுக்க விடமாட்டோம்.

பல கட்ட போராட்டம்

இந்த மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் உள்ளனர். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தற்போது அமைச்சரானதும் காவல்துறை மூலமாக நிலத்தை கையகப்படுத்த முயற்சிக்கிறார்.

ராணுவமே வந்தாலும், நிலத்தை கையகப்படுத்த விடமாட்டோம். ஒரு பிடி மண்ணை கூட விட்டு தரமாட்டோம். இனிமேல் பல கட்ட போராட்டம் என் தலைமையில் நடைபெற உள்ளது.

5 பேர் கொண்ட குழு அமைப்பு

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும், தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கும் என்.எல்.சி.யில் வேலை வழங்க வேண்டும். இல்லையென்றால் என்.எல்.சி நிர்வாகத்தை மூடிவிட்டு வெளியேற வேண்டும்.

8 வழிச்சாலையை எதிர்த்த தி.மு.க., தற்போது அதனை ஏற்கிறது. 8 வழிச்சாலையால் 15 ஆயிரம் ஏக்கர் விவசாய விளைநிலம் பாதிக்கப்படுவதால் தான் பா.ம.க. எதிர்க்கிறது.

முதல்கட்டமாக ஜி.கே.மணி தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, என்.எல்.சி. நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். எங்களது கோரிக்கைகளை ஏற்காவிட்டால் போராட்டத்தை தொடருவோம். நிலம் கையகப்படுத்தும் முயற்சியை எல்.எல்.சி. கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்