ரவுடியின் அண்ணன் உள்பட 3 பேர் கைது
வழக்கு செலவுக்காக கஞ்சா விற்ற ரவுடியின் அண்ணன் உள்பட 3 பேரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
வழக்கு செலவுக்காக கஞ்சா விற்ற ரவுடியின் அண்ணன் உள்பட 3 பேரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
ரவுடியின் அண்ணன்
வில்லியனூர் அருகே உள்ள கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடியான அய்யனார் என்கிற தாடி அய்யனார். தற்போது, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த சிலநாட்களுக்கு முன் புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராக அய்யனார் வந்தார். அவரை, அவரது அண்ணன் ராஜேஷ் (வயது 28) சந்தித்து பேசியுள்ளார். அப்போது கரிக்கலாம்பாக்கம் அருகே உள்ள தமிழக பகுதியான புதுக்கடை பார்த்தசாரதி என்பவரிடம் கஞ்சாவை வாங்கி அதனை விற்பனை செய்து அந்த பணத்தை வழக்கு செலவுக்கு பயன்படுத்துமாறு ராஜேஷிடம் அய்யனார் கூறியதாக தெரிகிறது.
போலீசார் கண்காணித்தனர்
இதை அறிந்த மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன், தாடி அய்யனார் அண்ணன் ராஜேசை ரகசியமாக கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் வில்லியனூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான தனிப்படை மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் ராஜேசை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
3 பேர் கைது
இந்த நிலையில் பார்த்தசாரதியிடம் இருந்து கஞ்சா வாங்கிய ராஜேஷ், தனது கூட்டாளிகள் கரிக்கலாம்பாக்கம் வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்த விக்கி (28), மேட்டுப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஸ்டீபன் (38) ஆகியோருடன் கோர்காடு அருகே ஏரிக்கரையில் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்தார். அவர்களை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 20 பொட்டலம் கஞ்சா மற்றும் ரூ.3 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. ராஜேசுக்கு கஞ்சா சப்ளை செய்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.