குப்பை வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்

முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்தது போல குப்பை வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;

Update: 2022-03-27 17:06 GMT
முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்தது போல குப்பை வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செயல்வீரர்கள் கூட்டம்
புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கதிர்காமம் தொகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் இன்று புதுச்சேரி லப்போர்த் வீதியில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகள் கூறினார். அப்போது அவர் பேசியதாவது:-
தட்டாஞ்சாவடி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் நாம் எதிர்பார்க்காத வெற்றி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்திற்கு பின்னர் கிடைத்தது. உள்ளாட்சி தேர்தல் என்பது முற்றிலும் சட்டமன்ற தேர்தலில் இருந்து வேறுபாடானது.
நகராட்சி தலைவர் பதவி
எனவே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான குழு அமைக்கப்படும். அந்த குழு யாரை பரிந்துரை செய்கிறதோ அவர்களே வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவார்கள். அதில் எந்த மாற்றமும் இருக்காது. புதுச்சேரியில் நகராட்சி தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்ற வேண்டும். அந்த வகையில் நாம் பணியாற்ற வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், துணை அமைப்பாளர்கள் ஏ.கே.குமார், சண்.குமரவேல், பெல்லாரி கலியபெருமாள், அமுதா குமார், பொருளாளர்   லோகையன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
குப்பை வரி
புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆட்சி பொறுப்பேற்றவுடன் நடந்த சட்டசபை கூட்டத்தில், குப்பை வரி உடனடியாக நீக்கப்படும் என்று உத்தரவிட்டார். ஆனால் இந்த உத்தரவு இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. எனவே உடனடியாக குப்பை வரியை நீக்க வேண்டும். சண்முகாபுரம் முதல் அணைக்கரை வீதி வரை உள்ள பொதுப்பணித்துறை வாய்க்கால்களை உடனடியாக தூர்வார வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்