2 ஆண்டுகளுக்கு பின் தொடங்கியது புதுச்சேரி விமான சேவை..!

கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி விமான சேவை இன்று தொடங்கியது.

Update: 2022-03-27 11:41 GMT
புதுச்சேரி, 

புதுச்சேரியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விமான சேவை தொடங்கியது. ஐதராபாத்தில் இருந்து விமானத்தில் வந்த கவர்னர் மற்றும் பயணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் வரவேற்றனர்.

புதுச்சேரி விமான நிலையம்

புதுச்சேரி, லாஸ்பேட்டையில் விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து கடந்த 2013-ம் ஆண்டு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மற்றும் 2015-ம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனம் பெங்களூருக்கு விமான சேவையை தொடங்கின. ஆனால் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாத தால் இந்த சேவைகள் நிறுத்தப் பட்டன.

இதற்கிடையே, நாடு முழுவதும் விமான சேவையை அதிகரிக்கும் நோக்கில், ‘உதான்’ திட்டத்தின் கீழ் சிறிய நகரங்களை வான் வழியாக இணைக்க திட்டமிடப்பட்டது. அதில், பயணிகளின் பாதி கட்டணத்தை, மத்திய அரசே ஏற்று, விமான நிறுவனங்களுக்கு அளிக்கும் என அறிவிப்பு வெளியிட்டது.

கொரோனா பாதிப்பு

அந்த திட்டத்தில் சேர்ந்து, தடைப்பட்டிருந்த விமான சேவை மீண்டும் 2017 ல் தொடங்கியது. இதற்கிடையே கடந்த 2019-ம் ஆண்டு பெங்களுரு விமான சேவை நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் ஐதராபாத்திற்கு மட்டும் விமானம் இயங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனா காலத்தில் கடந்த 2020 மார்ச் இறுதியில் நாடு முழுவதும் விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. 

தற்போது கொரோனா பாதிப்பு முற்றிலும் குறைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிர் ஆதித்யா சிந்தியாவை சந்தித்து பேசினார்.

2 ஆண்டுகளூக்கு பின் துவக்கம்

புதுவை அரசு சுற்றுலாத்துறையின் தொடர் முயற்சியினாலும், முதல்-அமைச்சர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரின் வலியுறுத்தலாலும் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் ஆதரவாலும் 2 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் மீண்டும் விமான போக்குவரத்து இன்று தொடங்கப்பட்டது.

இன்று மதியம் 12.05 மணிக்கு ஐதராபாத்தில் புறப்பட்ட விமானம் 1.30 மணிக்கு புதுச்சேரி வந்து சேர்ந்தது. அந்த விமானத்தை வரவேற்கும் விதமாக இருபுறமும் இருந்த தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீர் பீச்சியடித்து வரவேற்பு வழங்கப்பட்டது. மொத்தம் 72 இருக்கைகள் கொண்ட இந்த விமானத்தில் புதுச்சேரி கவர்னர் உள்பட 62 பயணிகள் வந்தனர்.

புதுச்சேரி விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, கவர்னர் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். 

மேலும் செய்திகள்