திருப்பத்தூர்: டிப்ளமோ படித்து மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது...!
திருப்பத்தூர் அருகே டிப்ளமோ படித்து மருத்துவம் பார்த்த போலி டாக்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜோலார்பேட்டை,
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே தாமலேரிமுத்தூர் பகுதியில் டிப்ளமோ படித்துவிட்டு ஒருவர் மருத்துவம் பார்த்து வருவதாக திருப்பத்தூர் சுகாதார இணை இயக்குனர் வேல்முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் இணை இயக்குனர் வேல்முருகன் தலைமையில் சுகாதாரத்துறையினர், தனிப்படை மூலம் நேற்று மதியம் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சம்பத் (வயது 48) என்பவர் தனது வீட்டில் ஆங்கில மருத்துவத்திற்கு பயன்படுத்தும் மருந்து, மாத்திரைகள் மற்றும் சிரஞ்சி, டெட்டஸ்கோப், பிபி செக்கப் கருவி உள்ளிட்ட பொருட்களுடன் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்து.
பின்னர் அவரை கையும் களவுமாக கைது செய்த அதிகாரிகள், போலி டாக்டர் சம்பத்திடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில்,
ஜோலார்பேட்டை அருகே டிப்ளமோ படித்து கடந்த 20 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்த சம்பத் என்பர் கைது செய்யப்பட்டு உள்ளார். மேலும் அவர் மருத்துவம் பார்க்க பயன்படுத்திய பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், போலி டாக்டர் சம்பத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.