வேலூர்: பஸ் மீது கார் மோதி விபத்து - காரிலிருந்து காயத்துடன் தப்பி ஓடியவர்களால் பரபரப்பு!
வேலூரில் பஸ் மீது கார் மோதிய விபத்தில் காரில் இருந்து தப்பி ஓடியவர்களால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் காரில் குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
வேலூர்,
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 5 மணி அளவில் தனியார் பஸ் ஒன்று வாலாஜா நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது சென்னை நோக்கி வேகமாக வந்த கார் பஸ்சின் பின்புறத்தில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது . இதில் பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி நின்றது.
அப்போது காரில் இருந்தவர்கள் காயங்களுடன் காரிலிருந்து இறங்கி தப்பி ஓடினர். அங்கிருந்தவர்கள் இதனைக் கண்டு திடுக்கிட்டு சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காரை மீட்டு சோதனை செய்தபோது அதில் 15 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
காரில் குட்கா பொருட்கள் கடத்தி வந்ததால் கார் விபத்தில் சிக்கிய உடன் அதில் இருந்தவர்கள் தப்பி ஓடியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கார் விபத்தில் தப்பி ஓடியவர்கள் காயமடைந்ததாதல் வேலூரில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்களா என போலீசார் ஒவ்வொரு ஆஸ்பத்திரியாக சென்று சோதனை நடத்தி வருகின்றனர். காரில் குட்கா பொருட்களை கடத்தி வந்தது யார்? எங்கு இருந்து கடத்தி வந்தார்கள் என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரிலிருந்து கார் ஆட்டோ லாரி உள்ளிட்ட வாகனங்களில் தினமும் குட்கா பொருட்கள் கடத்தி வருவது வாடிக்கையாகி உள்ளது. ஒரு சில நேரங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபடும் போது குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.