செல்போன் பயன்படுத்துவதை தாய் கண்டித்ததால் 17 வயது பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை...!
கோவையில் செல்போன் பயன்படுத்துவதை தாய் கண்டித்ததால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை,
கோவை மாவட்டம், ஒத்தக்கால் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் கல்பனா (34). கூலி வேலை செய்து வருகிறார். இவரது 17 வயது மகள் அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். கல்பனாவின் கணவர் குமார் இறந்துவிட்டதால், கல்பனா கூலி வேலைக்குச் சென்று தனது மகளை கவனித்து வந்தார்.
இந்நிலையில் மாணவி கடந்த சில தினங்களாக அதிக அளவு செல்போனை பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து தாய் கல்பனா திட்டியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த மாணவி நேற்று பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனிடையே கல்பனா வேலைக்கு சென்றுவிட்டு மாலை வந்து பார்த்தபோது வீட்டில் தனியாக இருந்த மாணவி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செட்டிபாளையம் போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.