10, 12-ம் வகுப்புக்கான இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு: அந்தந்த பள்ளிகளிலேயே விடைத்தாள்கள் மதிப்பீடு

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான 2-ம் கட்ட திருப்புதல் தேர்வு விடைத்தாள்கள் அந்தந்த பள்ளிகளிலேயே மதிப்பீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2022-03-24 17:39 GMT
கோப்புப் படம்
சென்னை, 

பொதுத் தேர்வு எழுத இருக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது. அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் முதற்கட்ட திருப்புதல் தேர்வு நடந்து முடிந்தது. இதில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுக்கான வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இது தொடர்பாக கல்வித்துறையை சேர்ந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு, தனியார் பள்ளி நிர்வாகிகள் சிலர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

தற்போது 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு வருகிற 28-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது. முதற்கட்ட திருப்புதல் தேர்வில் வினாத்தாள் கசிவு ஆன விவகாரம் போல், மீண்டும் எந்த சம்பவமும் நடந்துவிடக் கூடாது என்பதில் பள்ளிக்கல்வித்துறை தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

அதற்கேற்ற வகையில் தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை முழு மூச்சில் செய்கிறது. அதன்படி, 2 வகையான வினாத்தாளை இந்த முறை வடிவமைத்திருக்கிறது.10, 12-ம் வகுப்புகளை தொடர்ந்து, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந் தேதி முதல் திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை அந்தந்த பள்ளிகளிலேயே மதிப்பீடு செய்ய கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. முதல்கட்ட திருப்புதல் தேர்வுகளில் குளறுபடிகள் ஏற்பட்டதன் காரணமாக முதன்மை கல்வி அலுவலர்கள் இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்