புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி: 700 காளைகளும் 300 காளையர்களும் பங்கேற்பு...!

புதுக்கோட்டை அருகே ஆதனக்கோட்டையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளும், 300 காளையர்களும் பங்கேற்றனர்.;

Update: 2022-03-24 09:15 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை  மாவட்டம் ஆதனக்கோட்டையில் இச்சடி முனீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு  போட்டி நடைபெற்றது.

போட்டி இன்று காலை ‌ 8 மணிக்கு தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டை போட்டியை  மாவட்ட வழங்கல் அலுவலர் கணேசன் மற்றும் புதுக்கோட்டை வட்டாட்சியர் செந்தில்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

ஜல்லிக்கட்டு தொடங்குவதற்கு முன்னதாக வட்டாட்சியர் செந்தில்குமார் ஜல்லிக்கட்டு உறுதி மொழியை வாசிக்க வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமன்றி மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 700 காளைகளும் 300 காளையர்கள் பங்கேற்றுள்ளனர்.

வாடிவாசலில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்க்கப்படும் காளைகள் துள்ளி குதித்து சீறிப் பாய்ந்து வருவதை காளையர்கள் மல்லுக்கட்டி தழுவி வருகின்றனர்.

இந்த ஜல்லிக்கட்டில் காளைகளை தழுவிய காளையர்களுக்கும் காளைகளின் பிடியில் சிக்காமல் செல்லும் காளைகளுக்கும் பிரிட்ஜ், கட்டில், பீரோ, சில்வர் பாத்திரங்கள், ஃபேன், மிக்ஸி, குக்கர், கிரைண்டர், வெள்ளி காசு, தங்க காசு, மற்றும் ரொக்கப்பணம் உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டுக்கு முன்னதாக காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே வாடிவாசலுக்கு அனுமதிக்கப்பட்டன. அதேபோல் காளையர்களும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே காளைகளை தழுவ அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புக்காக மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு  நிஷா பார்த்திபன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்