போதை பொருட்கள் கடத்திய 7 பேர் சிக்கினர்
புதுவைக்கு ரெயில் மூலம் போதை பொருட்கள் கடத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் கஞ்சா, போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் வடமாநிலங்களில் இருந்து புதுவைக்கு வரும் ரெயில்களில் கஞ்சா, போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா உத்தரவின் பேரில் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் (பொறுப்பு) தலைமையில் போலீசார் இன்று மதியம் புவனேஸ்வரில் இருந்து புதுச்சேரி வந்த ரெயிலில் இருந்து இறங்கிய பயணிகள் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான முறையில் வந்த 7 பேரின் உடைமைகளை சோதனை செய்தபோது, 8 கிலோ தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் இருப்பதை கண்டு பிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்த போலீசார், 7 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.