தேனாம்பேட்டை மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகள் : மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு

தேனாம்பேட்டை பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.;

Update: 2022-03-23 06:10 GMT
Image courtesy: @CMOTamilnadu
சென்னை:

சென்னையில் கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழையால் நகரில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. மழைநீர் வடிகால் வசதிகள் இருந்தும் தண்ணீர் வடியாததால் பல இடங்களில் 4 நாட்களுக்கு மேலாக தண்ணீர் தேங்கியது.

இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். மழைநீர் தேங்கிய பகுதிகளை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு வரும் காலங்களில் மழைநீர் தேங்காத அளவுக்கு வடிகால்களை சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர்.

அதன் அடிப்படையில் வேப்பேரி, பெரம்பூர், புளியந்தோப்பு, தேனாம்பேட்டை, தி.நகர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் வேப்பேரி, புளியந்தோப்பு, பெரம்பூர், திரு.வி.க.நகர் பகுதிகளில் நடைபெற்ற பணிகளை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் நேரில் சென்று பார்வையிட்டார். இதைதொடர்ந்து இன்று தேனாம்பேட்டை பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.

தேனாம்பேட்டை செனடாப் சாலை, மூப்பனார் பாலம் அருகே ரூ.2 கோடியே 14 லட்சம் மதிப்பில் 870 மீட்டர் நீளத்துக்கு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை நடந்து சென்று பார்வையிட்டார். இந்த பணிகள் எப்போது முடிவடையும் என்றும் அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார். அடுத்த மழை வருவதற்குள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதன் பிறகு சீதம்மாள் காலனி சி.வி.ராமன் சாலையில் ரூ.2 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் 610 மீட்டர் நீளத்துக்கு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளையும் பார்வையிட்டார். இந்த பணிகளையும் விரைந்து முடிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

அவருடன் அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், ஆணையாளர் ககன்தீப்சிங் பேடி, மாவட்ட செயலாளர் மயிலை வேலு, கவுன்சிலர் ஷீபா வாசு மற்றும் முக்கிய அதிகாரிகள் உடன் சென்றிருந்தனர்.


மேலும் செய்திகள்