லிட்டருக்கு 76 காசு கூடுதல்: 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு

137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலையும் ரூ.50 அதிகரித்துள்ளது.

Update: 2022-03-23 00:27 GMT
சென்னை,

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் விலைவாசி உயரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை அனைத்து தரப்பு மக்களும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.

வரி குறைப்பு

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் தமிழக அரசு கடந்த ஆண்டு (2021) ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி பெட்ரோல் மீதான வரியை குறைத்ததன் காரணமாக, அதன் விலை லிட்டருக்கு 3 ரூபாய் 2 காசு குறைந்தது. இந்த விலை குறைவால், அப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 99 ரூபாய் 47 காசுக்கு விற்பனை ஆனது.

பெட்ரோல் விலை குறைக்கப்பட்டாலும், டீசல் விலை குறைக்கப்படாமல் தொடர்ந்து அதே விலையில் விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலை குறைக்கப்படாததற்கான விளக்கத்தையும் தமிழக அரசு அப்போது தெரிவித்து இருந்தது.

ஏறுமுகம்

தமிழக அரசு பெட்ரோல் விலையை குறைத்த பிறகு மேலும் அதன் விலை குறைந்து கொண்டே வந்தது. தொடர்ந்து விலை சரிந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் மீண்டும் உயரத்தொடங்கியது. அதன் பின்னர், ஒவ்வொரு நாளும் ஏறுமுகத்திலேயே காணப்பட்டது.

அந்த வகையில் செப்டம்பர்-நவம்பர் மாத இடைவெளியில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு 6 ரூபாய் 8 காசும், டீசல் லிட்டருக்கு 7 ரூபாய் 28 காசும் உயர்ந்திருந்தது. அதையடுத்து, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை திடீரென்று குறைந்தது. அதாவது, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4-ந் தேதி பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய் 26 காசும், டீசல் லிட்டருக்கு 11 ரூபாய் 16 காசும் சரிந்திருந்தது.

விலை குறைக்கப்பட்டபோது ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 40 காசுக்கும், ஒரு லிட்டர் டீசல் 91 ரூபாய் 43 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

137 நாட்களுக்கு பிறகு விலை உயர்வு

அதனைத்தொடர்ந்து, பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் ஏற்படாமல் நீடித்து வந்தது.

இதற்கிடையில் ரஷிய-உக்ரைன் போர் சூழல் தாக்கம் காரணமாக, பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடும் என்றெல்லாம் பேசப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடங்கிய நேரத்தில் இருந்து எப்போது வேண்டுமானாலும் விலை அதிகரிக்கும் என்ற தகவலும் வெளியானது. ஆனால் அப்போது விலையில் மாற்றம் இல்லாமலே இருந்து வந்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், சென்னையில் நேற்று திடீரென்று பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து காணப்பட்டது. பெட்ரோல், டீசல் லிட்டருக்கு தலா 76 காசு உயர்ந்து இருந்தது. அதன்படி, நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 16 காசுக்கும், டீசல் 92 ரூபாய் 19 காசுக்கும் விற்பனை ஆனது.

இதன் மூலம் கடந்த 4½ மாதங்களுக்கு பிறகு (137 நாட்கள்) பெட்ரோல், டீசல் விலை் உயர்ந்துள்ளது. இனி வரக்கூடிய நாட்களிலும் விலை உயர்வு இருக்கலாம் என்று பெட்ரோலிய விற்பனையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

கியாஸ் சிலிண்டர் ரூ.50 உயர்வு

இதேபோல் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலையும் நேற்று அதிரடியாக உயர்த்தப்பட்டது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.710 ஆக இருந்தது. பின்னர் இது படிப்படியாக அதிகரித்து கடந்த அக்டோபர் மாதம் ரூ.915.50 ஆக உயர்ந்தது.

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதை தொடர்ந்து அதிரடியாக நேற்று கியாஸ் சிலிண்டரின் விலையும் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.965.50 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு பிறகு இந்த விலை அதிகரிக்கப்பட்டு உள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

அதேநேரம், வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.8 குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ரூ.2,145.50-க்கு விற்பனை செய்யப்பட்ட வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.2,137.50 ஆக குறைந்துள்ளது.

பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலையை திடீரென உயர்த்தி இருப்பதற்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.

மேலும் செய்திகள்